நடுவரை சுட்டுக்கொன்றார் கால்பந்து வீரர்; அதிர்ச்சியில் ஆர்ஜென்டீனா
ஆர்ஜென்டீனாவின் டோபா மாகாணத்தில் உள்ளூர் அணிகள் மோதிய கால்பந்து போட்டியின் வீரர் ஒருவர் தனக்கு சிவப்பு அட்டை காட்டிய நடுவரை சுட்டுக்கொன்றுள்ளார். சீஸஸ் புளோரஸ்(வயது 48) என்ற நடுவரே உயிரிழந்தவராவார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உள்ளூர் அணிகளுக்கிடையிலான கால்பந்து போட்டியின்போது ஒரு வீரர் எதிர் அணி வீரரரிடம் விதிமுறைகளை மீறும் வகையில் நடந்துகொண்டார். இதனால் அந்த வீரருக்கு சிவப்பு அட்டை காட்டி மைதானத்தை விட்டு வெளியேறுமாறு நடுவர் தீர்ப்பளித்தார்.
நடுவரின் முடிவால் ஆத்திரமடைந்த அந்த வீரர் மைதானத்தை விட்டு நடுவரைத் திட்டியபடியே வெளியேறினார். தனது அறைக்கு சென்ற அவர் அங்கிருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மைதானத்துக்குள் சென்று தன்னை வெளியேற்றிய நடுவரை சரமாரியாக சுட்டார். துப்பாக்கிப் பிரயோகத்தில் தலை, கழுத்து, மார்பு பகுதிகளில் நடுவர் காயத்திற்கு இலக்கானார். அத்துடன் மைதானத்திலிருந்த வீரர் ஒருவரும் காயத்திற்கு இலக்கானார். போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே நடுவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமையை நேரில் கண்ட ஏனைய வீரர்களும், ரசிகர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
நடுவர் உடனடியாக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த வீரருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதோடு தப்பியோடிய வீரரை தேடும் நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர்.

