சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக அரசியல் மற்றும் அமைச்சின் வேலைப்பளு காரணமாக அமைச்சர் ராஜித சேனாரத்ன நாளொன்றுக்கு நான்கு மணித்தியாலங்களுக்கும் குறைவாகவே தூங்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.
இதன் காரணமாக இன்று மாலை திடீர் சுகவீனம் மற்றும் மார்பு வலி காரணமாக நாராஹேன்பிட்ட லங்கா ஹொஸ்பிட்டலில் அமைச்சர் ராஜித அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரின் உடல்நிலை திருப்திகரமானதாக இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது குடும்ப வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் பயணம்!
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலதிக சிகிச்சைக்காக இன்றிரவு சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று மாலை லங்கா ஹொஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் ராஜிதவுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது மூன்று இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அமைச்சரின் குடும்ப உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்றிரவு அமைச்சர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்கின்றார்.
அங்கு மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவருக்கான மேலதிக சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் அமைச்சர் ராஜிதவைப் பார்வையிடுவதற்கென மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தனர்.
சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைகளின் பின்னர் அமைச்சர் ராஜித சேனாரத்ன, எதிர்வரும் 22ஆம் திகதி இந்தியாவில் நடைபெறும் சர்வதேச சுகாதார மாநாட்டிலும் கலந்து கொண்ட பின்பே நாடுதிரும்பவுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

