புதிய அரசியல் சட்டம்: திருகோணமலையில் மாறுபட்ட கருத்துக்கள்




இலங்கையில் உத்தேச அரசியல் சட்ட சீர் திருத்தத்தில் வடக்கு - கிழக்கு இணைந்த அதிகார பகிர்வு தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் திருகோணமலையில் முன் வைக்கப்பட்டுள்ளன.

உத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக மக்கள் கருத்துக்களை பெறுவதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள இக் குழுவின் அமர்வு இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் நடைபெறுகின்றது.

இன்று செவ்வாய்க்கிழமை முதலாவது நாள் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அமர்வில் குறித்த விடயங்கள் தொடர்பாக தமிழர் தரப்பு வடக்கு - கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு போன்ற விடயங்களை முதன்மை படுத்தி தமது யோசனைகளை முன் வைத்தன.

முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் தரப்பு அதற்கு மாறுபட்டதாக தற்போதுள்ள ஓற்றையாட்சி மற்றும் மாகாண சபை முறைமை ஆகியவற்றை மையப்படுத்தி கருத்துக்களை முன் வைத்தன..

இலங்கை ஐந்து பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு அதிகார பகிர்வு இடம் பெற வேண்டும் என தமது யோசனையில் முன் வைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழர் மகா சபையின் தலைவரான கலாநிதி கே. விக்னேஸ்வரன் கூறுகின்றார்.

வட - கிழக்கு மாகாணங்கள் ஒரு பிராந்தியமாக உருவாக்கப்பட்டு மொழி வாரியாக சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு இடம் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணம் தனி மாகாணமாகவே இருக்க வேண்டும்.ஒற்றையாட்சியின் கீழ் மாகாண சபை மூலமே அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்று கிண்ணியா மஜ்லிஸ் அஷ் - சூரா முன் வைத்துள்ள யோசனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் தான் முஸ்லிம்கள் பரந்து வாழ்கின்றார்கள்.அம் மாகாணத்தில் தான் தங்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும் என அவர்கள் நம்புகின்றார்கள்.

இதன் காரணமாகவே எந்தவொரு மாகாணத்துடனும் கிழக்கு மாகாணம் இணைவதை முஸ்லிம்கள் விரும்பவில்லை என்று கிண்ணியா மஜ்லிஸ் அஷ் - சூரா வின் தலைவரான ஏ. எம். ஹிதாயத்துல்லாஹ் கூறினார்.