யோஷித்த ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு



இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ உட்பட ஐந்து பேர் தாக்கல் செய்த பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 25ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்கும்படி கடுவலை மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வாதிட்ட வழக்கறிஞர், சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குமாறு நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த வழக்குடன் தொடர்புடைய விசாரணைகள் நிறைவடைந்து விட்டதால், சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்வதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரங்கள் இருப்பதாக அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.

இதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய பொலிஸார், தொடந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், இவர்களை விடுதலை செய்வதன் மூலம் அதற்கு பாதிப்பு ஏற்படும் என கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதி பிணை மனுவை நிராகரிப்பதாக அறிவித்தார்.
யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேர், நிதி மோசடி விவகாரம் தொடர்பில் கடந்த 30ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.