இலங்கையில் சிறுபான்மையிலும் சிறுபான்மையாகவுள்ள வேடர், பறங்கியர் மற்றும் தெலுங்கர் ஆகிய இனங்களின் கருத்துக்களும் எண்ணங்களும் புதிய அரசியல் யாப்பில் உள்வாங்கப்படவேண்டும் என்ற கருத்துக்கள் கிழக்கு மாகாணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு கிழக்கு பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வேடர், தெலுங்கர் மற்றும் பறங்கியர்களை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் அந்த இனங்களை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் அநேகமாக சிங்களம் மற்றும் தமிழ் மொழி பற்றியே பேசப்படுகின்றதே தவிர உள் நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கும் எண்ணிக்கையில் சிறிய தொகையினராக ஏனைய மொழி பேசுகின்றவர்களை பற்றியும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே இந் நிகழ்வில் நோக்கம் என அறிமுக உரையாற்றிய சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இயக்குநரான கலாநிதி சி. ஜெயசங்கர் தெரிவித்திருக்கின்றார்.
அந்த இனங்களின் மொழி, வாழ்வியல் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்பது பற்றியெல்லாம் நாம் அறிந்து கொண்டு அதற்கான தீர்வைகளையும் கண்டறிய வேண்டும், அவர்களின் தனித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
புதிய அரசியல் யாப்புக்கு மக்கள் கருத்துக்களை பெறுவதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அமர்வு எதிர்வரும் செவ்வாய்கிழமை தொடக்கம் திங்கட்கிழமை வரை கிழக்கு மாகாணத்தில் நடைபெறவிருக்கின்றது.
இந்த அமர்வில் வேடர், பறங்கியர் மற்றும் தெலுங்கர் ஆகிய இனங்களை சோந்தவர்களும் பிரசன்னமாகி தங்களுடைய சமூகம் தொடர்பான கருத்துக்களையும் எண்ணங்களை முன்வைக்க வேண்டும் என்றும் இந்த நிகழ்வில் பலராலும் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.

