தெமட்டக்கொடை, சமந்தா திரையரங்கு பகுதிக்கருகில் வைத்து சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.
சிறைச்சாலை பஸ் ஒன்றில் கொண்டுச் செல்லப்பட்ட பாதாள உலகத் தலைவர்களில் ஒருவராக கருதப்படும் தெமட்டக்கொட சமிந்த மீது தெமட்டக்கொடை, சமந்தா திரையரங்கு அருகே நேற்று துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
பாரதலக் ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரின் படுகொலை விவகாரம் தொடர்பில் நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர், அவ்வழக்கின் சந்தேக நபர்களை வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே, சிறைச்சாலை பஸ் வண்டி மீது நேற்று பிற்பகல் 3.40 மணியவில் இச் சம்பவம் இடம்பெற்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் நுவான் வேதிசிங்கவின் தலமையில் இன்று முழுவதும் கொழும்பு நகரில் உள்ள பல சீ.சி.டி.வி. கண்காணிப்பு கமராக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன் போது துப்பாக்கிச் சூட்டினை மேற்கொள்ள, சந்தேக நபர்கள் பயணித்ததாக நம்பப்படும் கறுப்பு நிற ஹைபிரிட் ரக காரின் பயணப் பாதை, குறித்த சி.சி.ரி.வி. கண்காணிப்பு கமரா பதிவுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தாக்குதல் நடத்த சில வினாடிகளுக்கு முன்னர் இக்கார் பயணிப்பது குறித்த பதிவுகளே பெறப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மேலதிக பதிவுகள் பெறப்பட்டதாகவும் எனினும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் காட்சிகள் எதுவும் சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

