விடுதலைப் புலிகள் அமைப்பின் சில முன்னாள் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் மிதவாத அரசியல் கட்சியின் உறுப்பினர் ஒருவர் இலங்கையின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து கவலைகள் எழுந்துள்ளன.
அந்த அமைப்பைச் சேர்ந்த முன்னணி நபர்கள் எனக் கருதப்படும் ராம், நகுலன், கலையரசன் ஆகியோரைத் தொடர்ந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சிவகரனின் கைது மக்கள் மத்தியிலும், தமிழ் அரசியல் வட்டாரங்களிலும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள சிவகரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் செயலர் எனக் கூறப்படுகிறது.
இவர்கள் எதர்க்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தமக்கு தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை என அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கைதுகள் குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டிருக்கின்றது.
கைது செய்யப்பட்டுள்ளோரின் குடும்பத்தினர் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் உள்ளூர் அலுவலகங்களில் முறையிட்டுள்ளனர்.

