சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையினை தரமுயர்த்த ஆரிப் சம்சுடீனால் கிழக்கு மாகாணசபையில் பிரேரணை!
(சுலைமான் றாபி)
B தரத்தில் காணப்படும் சாய்ந்தருது வைத்தியசாலையினைத் தரமுயர்த்துவதற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனால் விஷேட பிரேரணையொன்று நேற்றயதினம் (26) இடம்பெற்ற சபை அமர்வின் போது முன்வைக்கப்பட்டுள்ளது.
அதில் சாய்ந்தமருது வைத்தியசாலையானது கிட்டத்தட்ட 1952ம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது B தரத்தில் காணப்படும் இவ் வைத்தியசாலையானது கிட்டத்தட்ட 60,000 மக்களுக்கு சேவை வழங்குகின்ற வைத்தியசாலையாகவும் சுனாமியினால் முற்றாக அழிவுற்றதன் பின்னர் சாய்ந்தமருது பிரதான வீதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட வைத்தியசாலையாகவும் காணப்படுகின்றது.
முன்னாள் சுகாதார அமைச்சர் சுபைர் அவர்களின் காலத்தில் இவ் வைத்தியசாலை மற்றும் நிந்தவூர், புல்மோட்டை வைத்தியசாலைகளையும் தள வைத்தியசாலைகளாக தரமுயர்த்துவதற்கு பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முற்றுப்பெற்றிருந்தது. தற்பொழுது நிந்தவூர் மற்றும் புல்மோட்டை வைத்தியசாலைகள் தள வைத்தியசாலைகளாக தரமுயர்த்தப்பட்டிருக்கின்ற போதிலும் இதுவரை சாய்ந்தமருது வைத்தியசாலை தளவைத்தியசாலையாக தரமுயர்த்தப்படாது இருக்கின்றமை பாரிய பாராபட்சமான நடவடிக்கையாகும்.
கிட்டத்தட்ட 60,000 மக்களுக்கு இந்த வைத்தியசாலை சேவைகளை வழங்கிக்கொண்டிருக்கின்றது. காரைதீவு, கொளனி, சென்ரல்கேம்ப், மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களிலிருந்து வருகின்ற மக்களுக்கு இந்த வைத்தியசாலை சேவையினை வழங்கிவருகின்றது. மேலும் இவ்வைத்தியசாலை தற்பொழுது கிட்டத்தட்ட 60 கட்டில்களைக் கொண்டு காணப்படுகின்றது.
இந்த வைத்தியசாலைக்கு பரிசோதனைக்கூடத்தில் தேவைப்படுகின்ற Blood Analyser இப்பொழுது உடனடித் தேவையாகக் காணப்படுகின்றது. மற்றும் இந்த வைத்தியசாலையில் X-Ray Plant (கதிர்வீச்சுப் படக் கருவி) ஒன்று இல்லாத சந்தர்ப்பத்தில் முறிவுகளுக்காக அனுமதிக்கப்படுகின்ற நோயாளிகளை சம்மாந்துறை வைத்தியசாலை மற்றும் கல்முனை வடக்கு அல்லது அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைகளுக்கு அனுப்பவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. அதன்மூலம் அந்த நோயாளிகளுக்கு போக்குவரத்திலேயே அவர்களினுடைய நோய்கள் அதிகரித்து இன்னும் துன்பப்படுகின்ற ஒரு சூழல் உருவாகிக்கொண்டிருக்கின்றது.
மேலும் இவ்வைத்தியசாலைக்கு உடனடித் தேவையாக காணப்படுகின்ற அம்பியூலன்ஸ் வண்டியானது பழையதாகவும் பழுதடைந்ததாகவும் காணப்படுவதனால் உடனடியாக இந்த வைத்தியசாலைக்கு புதிய அம்பியூலன்ஸ் வண்டியொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் முறிவு, இருதய நோய் போன்ற வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட ஏனைய நிபுணர்களைக் கொண்டுவந்து மக்களுக்கு சேவைகளை வழங்க்கூடியவைகளையே எதிர்பார்ப்பதாகவும், விரைவாக இவ்வைத்தியசாலையினை தரமுயர்த்தம் விடயத்தில் தற்போதைய சுகாதார அமைச்சர் தீவிரமாக கவனம் செலுத்தி மக்களுக்கு தகுந்த நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும் அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

