போரதீவு - பழுகாமம் வீதிக்கு ஒருகோடி பத்து இலட்சம் ஒதுக்கீடு
-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு - பழுகாமம் பிரதான வீதி புனரமைப்புக்காக கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மாகாண சபை உறுப்பினர்களுக்காக வழங்கப்பட்ட நிதியில் இருந்து ஒரு கோடி பத்து லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞா. கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின், படுவான்கரை பிரதேச அபிவிருத்தி தொடர்பான மக்கள் சந்திப்பொன்று களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இதன்போது கருத்து; தெரிவிக்கையிலேயே அவர் மேற்சொன்னவாறு கூறினார்.
தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த அவர்,
தற்போது சிலரால் எழுப்பப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பால் என்ன செய்ய முடியும்? என்னும் வினாவுக்கு பதிலளிக்க வேண்டியவனாக உள்ளேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இல்லாமல் இருந்திருந்தால், கடந்த காலங்களிலே இந்து ஆலயங்களிலே குண்டுமழை பொழிந்த போது, தமிழ் மக்களை வாட்டி வதைத்த போதெல்லாம் அரசாங்கத்திலே இருந்த தமிழ் அமைச்சர்களோ அல்லது முதலமைச்சர்களோ குரல் கொடுக்க முடிந்ததா? இல்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் குரல் கொடுத்தது.
அரசாங்க கட்சியின் இணைப்பாளர் ஒருவர் போரதீவு - பழுகாமம் வீதியை புனரமைப்புச் செய்வதற்காக 37 மில்லியன் ஒதுக்கியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் மத்திய அரசிலிருந்து இவ்வீதி புனரமைப்புக்கு எந்தவித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
அரசியல் செய்வதற்கு நாகரீகமான அரசியலும் உள்ளது. அநாகரீகமான அரசியலும் உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சொல்லிலே வீரர்களாக இருக்க மாட்டோம், செயலிலே வீரர்களாக இருப்போம். எங்களால் முடிந்த அனைத்து அபிவிருத்தி வேலைகளை செய்து தருவோம் என்பதை உறுதி கூறுகின்றேன் என்றார்.

