வியாழன் கிரகத்தின் துணைக் கோளான யூரோப்பாவை ஆராய்வதற்கு சிறந்த வழியைபரிசீலிக்க ஐரோப்பிய விஞ்ஞானிகள் இந்த வாரம் கூடுகின்றனர்.
ஏற்கனவே 2020ஆம் ஆண்டுவாக்கில், அமெரிக்கா இது தொடர்பில் எடுத்துள்ள முயற்சிகளுக்கு, இவர்களது எண்ணங்களும் கருத்துக்களும் கூடுதல் உதவியாக அமையக்கூடும்.
தொலைதூர உணர்வுக் கருவிகளை பயன்படுத்துவது தொடக்கம், உறைபனி படர்ந்துள்ள அதன் மேற்பரப்பை ஊடுருவி உள்ளே சென்று ஆராய்வது வரை, பல ஆலோசனைகளை இவர்கள் விவாதிப்பார்கள்.
இதில் எந்தக் கருத்து அல்லது ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ,அதற்கு முதலில் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஒப்புதல் கிடைக்க வேண்டும்.அதிகம் செலவில்லாத வகையில், கோளறிவியல் சார்ந்ததாக மட்டுமன்றி, தேர்வு செய்யப்படும் எண்ணமானது விண்ணை பரந்துபட்ட அளவில் ஆய்வு செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்பதே பாரிஸை தலைமையகமாகக் கொண்டுள்ள ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் சிந்தனையாக உள்ளது.
அதேபோல தமது முன்னெடுப்புகளில், அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸாவும் பங்குபெறவேண்டும் எனவும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் எதிர்பார்க்கிறது.
எதிர்வரும் 2022ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள், வியாழனின் அந்த துணைக்கோளை பலமுறை வலம்வந்து ஆய்வுகளை நடத்தும் விதத்தில் செயல்பட திட்டமிடப்படுகிறது.
அதேவேளை வியாழன் கிரகத்தின் அந்தத் துணைக்கோளின் மீது இறங்கும் விண்கலம் ஒன்றை நாஸா அனுப்பும் சாத்தியக்கூறுகளும் அதேகாலகட்டத்தில் உள்ளன.
அந்தத் திட்டம் 2022ஆம் ஆண்டிலோ அல்லது அதற்கு பிறகு எடுக்கப்படும் முயற்சியிலோ இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

