இந்தியாவிலிருந்து கம்போடியாவுக்கு புலிகளை அனுப்பத் திட்டம்



உலகம் முழுவதும் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏதுவாக, இந்தியாவிலிருந்து கம்போடியாவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
புலிகள் வசிக்கும் 13 ஆசிய நாடுகளின் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இந்தத் திட்டத்திற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின்படி, புலிகளின் எண்ணிக்கை பெருகிவரும் நாடுகளில் இருந்து, புலிகள் கிட்டத்தட்ட அற்றுப்போன நாடுகளுக்கு அனுப்பப்படும்.
இந்த நூற்றாண்டில் முதல் முறையாக உலகம் முழுவதும் காடுகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வனவிலங்கியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2010ஆம் ஆண்டில் 3,200ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 3,900ஆக உயர்ந்துள்ளது.
உலகில் வசிக்கும் புலிகளில் பாதிக்கும் மேற்பட்டவை அதாவது 2,226 புலிகள் இந்தியாவில்தான் வசிக்கின்றன.
புலிகளின் எண்ணிக்கையை 2022வாக்கில் தற்போது இருப்பதிலிருந்து இரு மடங்காக உயர்த்துவதற்கான சர்வதேசப் பிரச்சாரம் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
இந்தியப் புலிகள் கம்போடியாவுக்கு அனுப்பப்படுவது தவிர, ரஷ்யாவிலிருக்கும் அமுர் புலிகளை கஜகஸ்தானுக்கு அனுப்பும் திட்டமும் இருக்கிறது.
புலிகளுக்கான வாழிடங்கள், அவை வேட்டையாடுவதற்கான உயிரினங்கள் இருப்பதை உறுதிசெய்துகொண்ட பிறகு, அவை இடம்மாற்றப்படும் என குளோபல் டைகர் ஃபோரத்தின் செயலாளர் நாயகம் ராஜேஷ் கோபால் தெரிவித்தார்.
இந்தியாவிற்குள்ளேயும் புலிகளை இடமாற்றம் செய்ய வேண்டுமெனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
"கார்பெட் தேசியப் பூங்காவில் 260 புலிகள் இருக்கின்றன. அதாவது 100 சதுர கிலோ மீட்டரில் 20 புலிகள் வசிக்கின்றன. ஆனால், ராஜாஜி தேசிய பூங்கா போன்றவற்றில் இரண்டு மூன்று பெண் புலிகளே இருக்கின்றன" எனச் சுட்டிக்காட்டுகிறார் குளோபல் டைகர் ஃபோரத்தின் தலைமைச் செயல் அதிகாரியான கேஷவ் வர்மா.