வங்கதேசத்தில் நன்றாக நிலைகொண்ட பிறகு இந்தியாவிலும் மியான்மரிலும் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் குழு திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பின் வங்கதேச பிரிவின் தலைவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அந்த அமைப்பின் பத்திரிகையான தபீக்கிற்கு அளித்த பேட்டியிலேயே இந்தத் தகவலை வங்கதேசப் பிரிவின் தலைவரான ஷாயிக் அபு - இப்ராஹிம் அல் - ஹனீஃப் தெரிவித்திருக்கிறார்.
வங்கதேசத்தில் அந்த அமைப்பின் தலைவரது பெயரை ஐஎஸ் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.
மதச்சார்பற்ற எழுத்தாளர்கள், மதச் சிறுபான்மையினர் ஆகியோரைக் குறிவைத்து ஐஎஸ் படுகொலைகளை நடத்திவந்தாலும் அந்த அமைப்புக்கென வங்கதேசத்தில் ஒரு பிரிவு இருப்பதாக அந்த அமைப்பு கூறவில்லை.
இந்தத் தாக்குதல்கள் குறித்து பெருமிதம் தெரிவித்திருக்கும் ஷாயிக் அபு - இப்ராஹிம் அல் - ஹனீஃப், மத நம்பிக்கையில்லாதவர்கள், இறைதூதரைக் கேலி செய்பவர்கள் ஆகியோரை கொன்று தீர்க்க தங்கள் வீரர்கள் தற்போது கத்தியைத் தீட்டிக்கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
இந்தியாவிலிருக்கும் இந்துக்கள் மீதும் பர்மாவிலிருக்கும் பவுத்தர்கள் மீதும் ஜிஹாதை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாக வங்கதேசத்தை களமாக வைத்திருப்பது குறித்தும் அல் - ஹனீஃப் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்தியாவைப் பொறுத்தவரை கிழக்கில் வங்கதேசமும் மேற்கில் பாகிஸ்தானும் இருப்பதால் வங்கதேசத்தில் வலுவான தளத்தை உருவாக்கினால் இரு புறங்களிலும் இருந்து ஒரே நேரத்தில் இந்தியாவிற்குள் கெரில்லா தாக்குதல்களை நடத்த வசதியாக இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.
தாங்கள் இந்தியாவைத் தாக்கத் தயாரானதும் இந்திய ஜிஹாதிகளும் தங்களுடன் சேர்ந்துகொள்வார்கள் என அவர் கூறியிருக்கிறார்.
இந்தியாவிலும் மியான்மரிலும் தாக்குதல் நடத்தப்போவதாக அல் - ஹனீஃப் கூறியிருந்தாலும் வங்கதேசத்தில் தங்களுக்கு ஆட்கள் குறைவாக இருப்பதை அவர் உணர்ந்திருப்பதாகவே தெரிகிறது. இதன் காரணமாகவே, எளிதான இலக்குகளைக் குறிவைத்து கொலைகள் நடத்தப்படுகின்றன.

