தபால் ஊழியர்கள் மேலதிக சேவையை பகிஷ்கரித்துள்ளனர்



நேற்று நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள், மேலதிக சேவையை பகிஷ்கரித்துள்ளனர்.
தபால் திணைக்களத்தில் காணப்படும் 4,000 வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி இந்த பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அதனைவிட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தபால் திணைக்களத்தில் பல சேவைகள் மந்தகதியில் முன்னெடுக்கப்பட கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக தபால் சேவைக்கு ஊழியர்களை உள்ளீர்ப்பு செய்வது மற்றும் ஊழியர்களுக்கான பதவி உயர்வு என்பன பல வருடங்களாக உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை எனவும் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
தபால் திணைக்களத்தின் முகாமைத்துவ பிரிவில் காணப்படும் குளறுபடிகள் காரணமாகவே இந்த நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, தங்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் சிந்தக்க பண்டார கூறியுள்ளார்.
இதேவேளை, தபால் தொழிற்சங்க ஊழியர்களின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படுவதாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் தொழிற்சங்கங்களுடனும் ஏற்கனவே கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தபால் ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு காரணமாக அரச அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் பாதிப்புக்குள்ளாகவுதாகவும் தபால் மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.