புதிய அரசியலமைப்பு நாட்டை பிரிப்பதற்கு அல்ல ஒரே குடையின் கீழ் அனைவரையும் கொண்டுவருவதற்கே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தினை இன்று திறந்து வைத்து, கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் ஜனாதிபதி உரை நிகழ்த்துகையில்,
சம்மந்தன் அவர்கள் தனது உரையில் நாட்டின் நல்லிணக்கம் பற்றி பேசினார், உருவாக்கப்படுகின்ற புதிய அரசியலமைப்பு பற்றியும் யாழ் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற சம்பவம் பற்றியும் பேசியிருந்தார். அவருடைய உரை நல்லதொரு உரை அந்த உரைக்குப் பின்னரே நானும் இப்படி பேச வேண்டும் என்று எண்ணுகிறேன்.
கடந்த வருடம் ஜனவரி எட்டாம் திகதி நாட்டு மக்கள் புதியதொரு அரசாங்கத்தை ஏற்படுத்தினார்கள் எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்றுக்கொண்டே மக்கள் புதிய அரசாங்கத்தை உருவாக்கினார்கள்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் மக்களுக்கு தெரிவித்த அனைத்து விடயங்களையும் நிறைவேற்றியே தீருவோம் என்பதனை நான் இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
மேலும் நாட்டில் சில பேர் புதிது புதிதாக சில சில இயக்கங்களை உருவாக்குகின்றமையை நான் அறிகின்றேன், இந்த புதிய இயக்கங்கள் எல்லாம் எதற்காக என்று நான் அவர்களை பார்த்து கேட்கின்றேன்.
நான் எப்பொழுதும் ஒரு அடி முன்னால் வைப்பேனே தவிர பின்னால் வைக்கமாட்டேன். எல்லோரும் இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகள் பற்றி சரியாக புரிந்துகௌ்ள வேண்டும், தெரிந்துகொள்ள வேண்டும்.
நாட்டில் தேசிய ஜக்கியத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் இந் நாட்டில் வாழ்கின்ற சிங்கள பௌத்த மக்கள் சந்தோசமாக வாழ வேண்டும் என்றால் ஏனைய மக்களின் பிரச்சினைகளை புரிந்து தெரிந்து செயற்பட வேண்டும்.
நாட்டில் வடக்கில் உள்ள மக்களுக்கு பிரச்சினைகள் உண்டு என்பதனை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாட்டில் உள்ள எல்லா இன மக்கள் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்த நாம் செய்ய வேண்டிய பல விடயங்களை புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் அனைவரும் செயற்படவேண்டும்.
ஆனால் இதற்கு அப்பால் சிலர் கொழும்பிலிருந்து கொண்டு பத்திரிகையாளர் சந்திப்புக்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கொழும்புக்கு மாத்திரம் வரையறுக்கப் பட்டிருக்கின்றார்கள்.
அவர்கள் ஊடக வீரர்களாக மாறிவிட்டிருக்கின்றார்கள் ஆனால் அந்த ஊடக வீரர்கள் வடக்கிற்கு வந்து மக்களின் பிரச்சினைகள் என்ன என்பதனை கேட்டு அறிந்து கொள்வதில்லை.
அவர்கள் கிழக்கிலங்கைக்கு சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை தேடிப்பார்ப்பதில்லை. அதேபோன்று தென்னிலங்கை மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு சரியாக தீர்த்து வைக்கலாம் என்றும் அவர்கள் சிந்திப்பதில்லை.
எனவே இவ்வாறு புதிய புதிய இயக்கங்களை உருவாக்குபவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புவதாவது முதலில் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்குவது பற்றி தெரிந்துகொள்ளுங்கள் புரிந்துகொள்ளுங்கள் என்று. அவர்கள் ஆட்சி செய்த போது எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.
எனவே நாட்டை சரியான வழியில் கொண்டு செல்லவும், சரியான வழியில் வழிநடத்தவும், அந்த நாட்டில் நல்ல நேர்மையான எவ்வித தவறுகள் செய்யாத நல்ல தலைவர் இருக்க வேண்டும்.
ஆனால் நாட்டில் இன்று அந்த தேவை இல்லை என்று எண்ணுகிறோம் கடந்த வருடம் ஜனவரி மாதத்திற்கு பின்னர் நாம் அந்தக் குறையை தீர்ப்பதற்காகவே பொறுப்பை ஏற்று கொண்டிருக்கின்றோம்.
எனவே இந்த நாட்டை அபிவிருத்தி செய்து நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்ற போது சிலர் அதற்கு ஏதிராக தவறான பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
நாங்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது என்பது நாட்டை பிரிப்பதற்காக அல்ல எல்லோரையும் ஒன்றாக ஒரே குடையின் கீழ் வைத்து சமாதானமாக வாழக்கூடிய நிலைமையினை உருவாக்கவே புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துகின்றோம்.
எனவே அவ்வாறு தவறான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றவர்களை பார்த்து நான் கேட்கின்றேன் மக்களை தவறான பாதையில் இட்டுச்செல்லவேண்டாம் என்று. எனவே நாட்டு மக்கள் மத்தியில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த நான் செயற்படுகின்றேன் என்பதனையும் கூறிக்கொள்கின்றேன்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் நல்லிணக்கத்தை உருவாக்குவேன் என்று கூறியதோடு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையையையும் ஒழிப்பேன் என்றும் நான் அன்று சொன்ன அத்தனை விடயங்களையும், வாக்குறுதியையும் அதே விதத்தில் நிறைவேற்றுவேன்.
ஆனால் சிலர் அதிகாரத்தை கேட்கின்றார்கள். ஏன் இந்த அதிகாரம்? கள்ளத்தனமாக வஞ்சக வேலைகளுக்காகவா இந்த அதிகாரத்தினை கேட்கின்றீர்கள் எனவும் அவர்களிடம் நான் கேட்கிறேன்.
ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவற்றை பலப்படுத்துவதற்கு எதிரானவர்களா அவர்கள் எனவும் கேட்கின்றேன்? எனவே நாம் அனைவரும் உண்மையை புரிந்துகொள்ள வேண்டும் நேர்மையாக மக்களுக்காக பணிபுரிய வேண்டும். அதே சமயம் எங்கள் மத்தியில் தவறுகள் இருந்தால் அதனை திருத்திக் கொள்ளவேண்டும்.
எனவும் தெரிவித்த ஜனாதிபதி தொடர்ந்து,
யுத்தம் நிலவிய காலத்தில் இங்கு சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஜேர்மன் நாடானது பல வழிகளிலும் உதவியது. உலகின் கைத்தொழில் துறையில் பலம் வாய்ந்த நாடு என்ற வகையில் நாம் ஜேர்மனியை ஏற்றுக்கொள்கின்றோம்.
எமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தை வழங்கி வைத்தமைக்காக ஜெர்மன் நாட்டுக்கு நாம் நன்றி கூறுகின்றோம்.
இந்த நிறுவனம் இலங்கைக்கும் ஜேர்மனுக்கும் இடையில் இருக்கின்ற நட்புக்கு அடையாளமாக விளங்கும். எனவே எமது அரசு எதிர்வரும் காலங்களிலும் ஜேர்மன் நாட்டுடன் நெருக்கமாக பணியாற்றும்.
மேலும், எமது நாட்டில் பல்கலைகழகத்தில் இருந்து வெளியேறுகின்ற கலைப்பிரிவு பட்டதாரிகள் வேலை இல்லை என்று கூறி ஆர்ப்பாட்டம் போராட்டங்களை நடாத்துகின்றார்கள்.
அவர்கள் வேலையில்லை என்று கூறி இவ்வாறான போராட்டம் நடைபெறுவதற்கு காரணம் என்ன என்பதனை நாம் அவதானிப்போமானால் அது கல்வி பயின்ற இளம் பட்டதாரிகளின் தவறு அல்ல. நாட்டின் கல்விக் கொள்கையிலும், கல்வித் திட்டமிடலிலும் உள்ள தவறே ஆகும்.
இந்த தவறை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். எனவேதான் தொழில் வாய்ப்பை வழங்கக் கூடிய கல்வியை வழங்க வேண்டும் அதற்கு எங்களுடைய கல்விக்கொள்கையிலும் திட்டமிடலிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், பல்கலைகழகங்களுக்கு தெரிவு செய்யப்படாத இளைஞர் யுவதிகளுக்கு தொழிற் பயிற்சி நிலையங்கள் தேவை. உலக நாடுகளில் பட்டதாரிகளை உருவாக்குகின்ற போது அவர்கள் தங்களுடைய நாட்டுக்கு தேவையான பட்டதாரிகளையே உருவாக்குகின்றார்கள்.
எனவே நாமும் புதிய அரசாங்கம் என்ற வகையில் புதிய தொழில் பயிற்சி துறைகளை ஏற்படுத்துகின்றோம். இந்த நிறுவனங்களில் படிக்கின்ற பயிற்சி பெறுகின்ற இளைஞர் யுவதிகளுக்கு நல்தொரு எதிர்காலம் காத்திருக்கின்றது.
இந்த பயிற்சிக்கு பின்னர் அவர்கள் வேலை வேண்டும் என்று கூறி போராட்ட ஊர்வலம் நடத்தவேண்டியதில்லை. இங்கு பெறுகின்ற சான்றிதழ்கள் மூலம் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே இங்கு கல்வி பயில்கின்ற அனைவருக்கும் நல்லதொரு எதிர்காலம் உருவாக வேண்டும் என்று நான் ஆசிர்வதிக்கின்றேன். எனக்கூறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையினை நிறைவுசெய்து கொண்டார்.

