மலையகத்திற்கு மேலும் பத்தாயிரம் வீடுகள் வேண்டும்!




(க.கிஷாந்தன்) 

அரசாங்கத்தின் அடுத்த வரவு செலவு திட்டத்தில் மலையகத்திற்கு மேலும் பத்தாயிரம் வீடுகள் வேண்டும் என நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இது தொடர்பில் தெரிவித்துள்ளதாகவும், நிச்சயமாக இவ்வீடுகள் கிடைக்கும் எனவும், அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் 23 தனி வீடுகளை கட்டி அமைக்க 07.08.2016 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் பசும்பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இந்த அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.
இதில் மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் தலைமை தாங்கி அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதன்போது இவ் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் உள்ளிட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, ஆர்.இராஜாராம் ஆகியோருடன் மலையக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் ஏ.லோறன்ஸ், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
ரொசிட்டா தோட்டத்தில் இலக்கம் ஒன்று தொடர் குடியிருப்பு லயத்தில் அடிப்படை வசதிகள் அற்ற 23 வீடுகளை அவ்விட்டத்திலிருந்து அகற்றி அவர்களுக்கு புதிய தனி வீடுகளை அமைத்துக்கொடுக்க ஒரு கோடியே 35 இலட்சம் ரூபா செலவில் வீடுகளை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.