விசாரணைக்காக அழைக்கும் நேரங்களிலெல்லாம் விளக்கமளிக்க தயார்



நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்ட பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்காக அழைக்கும் நேரங்களிலெல்லாம் தான் சென்று விளக்கமளிக்க தயாராக இருப்பதாக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
இன்று காலை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரான அவர் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விளக்கங்களை வழங்கியுள்ளதாக இன்று மாலை அவரது அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
எதிர்வரும் 29 ஆம் திகதியே தான் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும், அன்றைய தினம் தனக்கு பல வேலைப்பழுக்கள் காணப்படுவதால் முற்கூட்டி இன்று அந்த ஆணைக்குழுவுக்குச் சென்று அவர்கள் எதிர்பார்த்த விளக்கங்களை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் கடந்த 2010 – 2015 ஜனவரி 10 ஆம் திகதி வரை சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற அரிசி இறக்குமதி தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைக்காக தான் அழைக்கப்பட்டதாகவும் தற்போதைய அமைச்சர் என்ற வகையில், தான் அது தொடர்பான தகல்வல்களை வழங்கியதுடன் இனி வரும் காலங்களிலும் இந்த விசாரணை ஆணைக்குழுவுக்கு இது தொடர்பில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க எந்த நேரத்திலும் தான் தயார் என்பதையும் ஆணைக்குழுவிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த அரிசி இறக்குமதி விடயத்தில் எந்தவொரு சம்பந்தமும் இல்லாத என் மீது சில ஊடகங்கள், வேண்டுமென்றே கட்டுக் கதைகளைத் திட்டமிட்டுப் பரப்பின. சிங்களப்பத்திரிகை ஒன்றும், ஆங்கிலப் பத்திரிகை ஒன்றும் சதொசவின் கடந்தகால இந்த அரிசி இறக்குமதியுடன் என்னைத் தொடர்புபடுத்தி, இந்தச் செய்தியை திரிபுபடுத்தி இனவாத சிந்தனையுடன் முன்பக்கச் செய்தியாக முக்கிய தலைப்புக்களுடன் செய்திகளை வெளியிட்டன.
மேலும் ஆணைக்குழுவினது கடிதம் தனக்கு கைக்குக் கிடைக்கு முன்னரே, இவ்வாறான பொய்யாகப் புனையப்பட்ட செய்தியை வேண்டுமென்றே அப்பத்திரிகைகள் பிரசுரித்ததனால், அவ்விரண்டு பத்திரிகைகளுக்கும் எதிராக ஒரு கோடி நஷ்டஈடு கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கை கடிதம் (Letter of Demand) ஒன்றை நேற்று அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சதொச நிறுவனத்தை தான் பொறுப்பேற்ற பின்னர் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியுள்ளதாகவும் அந்த நிறுவனத்தை சுதந்திர நிறுவனமாக இயங்கச் செய்வதுடன், கொள்வனவிலும் போட்டித் தன்மை ஒன்றை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தியமை மட்டுமன்றி தனது அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கிய அத்தனை நிறுவனங்களையும், இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அந்தவகையில் தனது அமைச்சின் கீழான நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஒருவருட காலத்துக்குள் இலாபமீட்டச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவற்றை வெற்றிகரமானதாக்குவதற்கான காலக்கெடு ஒன்றையும் வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்