தமிழறிஞர் மணவை முஸ்தபா கால மானார்.



தமிழறிஞர் மணவை முஸ்தபா சென்னையில் நேற்று கால மானார். அவருக்கு வயது 82. வாத நோயால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது.
அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் மணவை முஸ்தபா. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறை சார்ந்த 8 கலைச்சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளார். 30 மொழிகளில் வெளிவந்த யுனெஸ்கோ கூரியர் இதழ் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 35 ஆண்டுகள் பணியாற்றினார். என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா களஞ்சியம் தமிழ்ப் பதிப்பின் பொறுப்பாசிரியராகவும் திறம்பட பணிபுரிந்துள்ளார்.
இவர் எழுதிய "இசுலாமும் சமய நல்லிணக்கமும் " எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தத்துவம், சமயம்,
அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்" எனும் நூல் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன.
தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் உள்பட ஏராளமான நூல்களை இயற்றியிருக்கிறார். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தையும் இவர் நிறுவி உள்ளார். அதன் மூலம் இணைய நூலகமும் தற்போது இயங்கி வருகிறது. பல்வேறு தமிழ் வளர்ச்சிக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். 40க்கும் மேற்பட்ட பட்டங்களும், விருதுகளும் பெற்றுள்ளார்.