காத்தான்குடி ஆ சிரியர் விளக்கமறியலில்



மாணவன் ஒருவனைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆசிரியரை எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.
காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையில் தரம் மூன்றில் கற்கும் மாணவன் ஒருவனை கடந்த முதலாம் திகதி அம்மாணவனின் வகுப்பு ஆசிரியர் பாடசாலையில் வைத்து தாக்கியதாக விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், காயமடைந்த மாணவன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
மேலும், இம்மாணவனைத் தாக்கிய ஆசிரியரைப் பொலிஸார் தேடி வந்த நிலையில், மேற்படி ஆசிரியர் றஷீட் நேற்று (06) திங்கட்கிழமை காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
இவரிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே, அவருக்கு விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
தான் சிறுநீர் கழிப்பதற்காக வகுப்பறையை விட்டு மலசலகூடம் சென்றுவிட்டு மீண்டும் வகுப்பறைக்கு சென்றபோது தன்மீது மேற்படி ஆசிரியர் தாக்கியதாக பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவிதிருந்தமை குறிப்பிடத்தக்கது.