தோட்டக்காணி ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவையில்



(க.கிஷாந்தன்)

பொகவந்தலாவை பிளான்டேசனுக்கு சொந்தமான 467 ஹெக்டேயார் காணியில் 4 ஏக்கர் காணியினை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவை பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் 27.02.2017 9.30 மணியளவில் பொகவந்தலாவை கொட்டியாகலை தொழிற்சாலைக்கு முன்னால் உள்ள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டியிலுள்ள நபரொருவர் மாடு வளர்ப்புக்காக வளர்க்கப்படும் புற்றரையினை தனக்கு சொந்தமென ஆவணங்களை காட்டி அதில் சுயதொழில் ஆரம்பிக்க போவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன் காணியினை துப்புரவு செய்ய முற்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து தோட்ட நிர்வாகம் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளது. அதனைத்தொடர்ந்தே இவ் ஆர்ப்பாட்டம் பொதுமக்களால் 27.02.2017 அன்று நடத்தப்பட்டது.

இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில், இந்த காணி காலம் காலமாக தோட்டத்துக்கு சொந்தமானது எனவும் இதில் தான் தொழிலாளர்கள் மாடு வளரப்பிற்காக புல்லினை பெறுவதாகவும் ஆக இந்த காணிக்கு முறையற்ற விதத்திலேயே ஆவணங்கள் செய்துள்ளதாகவும் இந்த ஆவணங்கள் போலி ஆவணங்களாக இருக்குமென சந்தேகிக்கப்படுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 200 பேர் வரை கலந்து கொண்ட இவ்வார்ப்பாட்டம் ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக நடைபெற்றது.