டெங்கு நோயின் தாக்கம் கிண்ணியா பிரதேசத்தில் குறைந்து வரும் அதேசமயம் திருகோணமலை நகரை அண்டிய பிரதேசங்களில் அதன் தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதார தரப்புகள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 48 பேர் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், இவர்கள் அனைவரும் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என கிண்ணியா வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் கூறினார்.
டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பில் மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிண்ணியா வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கிண்ணியா பகுதியில் கடந்த ஒரு வாரத்தினுள் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் குறைவடைந்துள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அத்தியட்சகர் அஜீத் மொஹமட் மஜீத் குறிப்பிட்டார்.
இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 24562 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவர்களில் கொழும்பில் மாத்திரம் 5838 பேர் பதிவாகியுள்ளதாக தொற்றாத நோய்கள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்த்தில் 2965 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 1745 பேரும் பதுவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

