அக்கரைப்பற்று நீதவான் பீற்றர் போல், தெ.கி.ப.மாணவர்கள் 58 பேருக்கு எச்சரிக்கை



அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற அழைப்பாணை ஒன்றிக்கென தென் கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களன சந்தேக நபர்கள் 58 பேர், இன்று தமது சட்டத்தரணிகள்  எம்.ஐ.உவைசுர்ரஹ்மான்,டி.சசிகா ஆகியோருடன்  அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜராகினர்.

முறைப்பாட்டாளரான தெ.கி். பல்கலைக் கழக சட்டத்தரணிகளின் சமர்ப்பணம்,சந்தேக நபர்களின் சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை நன்கு ஆராய்ந்த அக்கரைப்பற்று கௌரவ மாவட்ட நீதிபதியும், நீதவானுமாகிய பீற்றர் போல் :

"மாணவர்களைப் பல்கலைக் கழகத்திற்குச் செல்வதன் நோக்கம் தமது பாட நெறிகளை கற்று, பட்டம் பெற்று நாளைய தலைவர்களாக நாட்டுக்கும் சமூகத்துக்கும் பணியாற்றுவதற்காகவாகும்.

பெற்றோர்கள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் உங்களைப் பல்கலைக்கழக்த்துக்கு அனுப்புகின்றனர். கற்பதற்காகச் செல்லும் நீங்கள், ஏனைய  பல்கலைக்கழக மாணவர்களுக்கும், நிருவாகத்தினருக்கும் தடையை ஏற்படுத்தி வருவது கண்டிக்கத் தக்கது.இது மட்டுமல்லாது, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், மேல் நீதிமன்றில்தான் பிணை வழங்க முடியும். பல்கலைக் கழக நிருவாகத்தில், குறைகள் இருக்குமெனின் உரியவர்களுடன் பேசித் தீர்வினைக் காண வேண்டுமே தவிர, நிருவாக நடவடிக்ககைகளுக்குத் தடை ஏற்படும் விதமாக செயற்படல் கூடாது.இது போன்ற செயற்பhடுகள், நீதிமன்ற பிஸ்காலின் அறிவித்தலை உதாசீனம் செய்தல்,நீதிமன்ற கட்டளைகளை மீறல் போன்றவை தொடருமாயின் நீங்கள் விளக்க மறியலில் வைக்கப் படுவீர்கள் என மாணவர்களை  எச்சரித்து, சொந்தப் பிணையில் செல்ல அனுமதித்தார்.மேலும் சந்தேக நபர்கள் வார இறுதியில் அக்கரைப்பற்று பொலிசில், கையொப்பமிடவும் உத்தரவு பிறப்பித்தார்.


இதேவேளை, பல்பலைக்கழகமானது, மாணவர்களின் கோரிக்கைகளை, காலதாமதம் காட்டாது தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் பல்கலைக் கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இவ் வழக்கு எதிர்வரும் 12 ந் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது.
    

சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது,

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 60 மாணவர்களை, இன்று 5ஆம் திகதியன்று ஆஜராகுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தினால், தனித்தனியாக கடந்த புதனன்று
அழைப்பாணை விடுக்கப்பட்டது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இயங்கிவரும் நிருவாக பிரிவு கட்டடத்தினுள் அத்துமீறி நுழைந்து கடமைகளைச் செய்யவிடவில்லையென அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில்  பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சேர்ந்த 05 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை இரத்துச் செய்யுமாறு கோரி,  பல்கலைக்கழக நிருவாக கட்டடத்தினுள் கடந்த  எட்டு நாட்களாக மாணவர்கள் தொடர்ச்சியான மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் நடத்திவரும் மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம்,  (03) மாலை 4 மணியளவில் கட்டளை பிறப்பிந்திருந்jது. அதனையும் அந்த மாணவர்கள்  பொருட்படுத்த வில்லை.