தபால்மூல வாக்களிப்புக்கு சிக்கல்?



இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் பதிவுகளின் இறுதிக் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான வாக்களிப்புப் பத்திர விநியோகங்கள், நாளை முதல் முன்னெடுக்கப்பட உள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில், தபால் சேவை ஊழியர்களால், நாளை (10) முதல், தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனால், வாக்களிப்புப் பத்திர விநியோக நடவடிக்கைகள் முடங்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ​பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்க, தபால் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதனால், தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
எவ்வாறாயினும், இவ்வாறான தடங்கல்கள் ஏற்பட்டால், மாற்று வழிகளில் தேர்தல் நட்வடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்துள்ள அரச ஊழியர்களின் பெயர்ப் பட்டியல், மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலகங்களினால், நேற்று (08) உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாவட்டத் தேர்தல் அலுவலகங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள், எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளன.
ஏனைய அனைத்து அரச உத்தியோகஸ்தர்களுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள், எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.