அமெரிக்காவில் தங்கியுள்ள எல் சால்வடோர் நாட்டவர்களுக்கான தற்காலிகப் பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்கா விலக்கியுள்ளதுடன், அவர்கள் 18 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரில் கடந்த 2001 ஆம் ஆண்டு இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், உடைமைகளை இழந்த சுமார் 2 இலட்சம் பேர் அமெரிக்காவிற்குள் அகதிகளாக நுழைந்தனர். இவர்களுக்கு அந்நாட்டு உள்துறை சார்பில் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
இந்நிலையில், 17 ஆண்டுகளாக அமலில் உள்ள தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து தற்போது விலக்கப்பட்டுள்ளது. மேலும், 18 மாதங்களில் எல் சால்வடோர் நாட்டவர்கள் வெளியேற வேண்டும் அல்லது நாடுகடத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாதுகாப்பு அந்தஸ்து விலக்கப்பட்டவர்களில் நீண்ட காலமாக அமெரிக்காவில் பணியாற்றுபவர்களைக் காப்பாற்ற அமெரிக்க நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டங்கள் இயற்றினால் தான் முடியும் என குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
59 ஆயிரம் ஹைதி நாட்டவர்கள் மற்றும் 5,300 நிகரகுவா நாட்டவர்கள் இதேபோல தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தில் உள்ள நிலையில், சால்வடோர் நாட்டவர்கள் மீதான நடவடிக்கை அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.


Post a Comment
Post a Comment