டெல்லி கேபிடல்ஸ்: "எனது சதத்தைக் காட்டிலும் அணியின் வெற்றியே முக்கியம்"

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டி, முந்தைய நாள் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற பரபரப்பான போட்டி போன்றது என்று சொல்ல முடியாது. ஆனால் இந்திய வீரர்கள் இருவர் தங்களின் அபாரமான ஆட்டத்தை வெளிக்காட்டியுள்ளனர்.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி கொல்கத்தா அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டெல்லி அணி வெற்றி பெறுவதற்கு 179 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டது. அதனை தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகார் தவானின் 97 ரன்களும், ரிஷப் பந்த்தின் 46 ரன்களையும் கொண்டு வெறும் மூன்று விக்கெட் இழப்புகளுக்கு அடைந்து, டெல்லி அணி வெற்றி பெற்றது.
டாஸை இழந்து முதலில் பேடிங் செய்ய வந்த கொல்கத்தா அணி இருபது ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ஷுப்மன் கில் 65 ரன்களையும், ரசல் 45 ரன்களையும் எடுத்திருந்தனர்.
டெல்லி அணியின் வெற்றி எளிய வெற்றியாக தெரிந்தாலும் அது அவ்வளவு சுலபமானதாக இல்லை.
தக்க சமயத்தில் ஷிகார் தவானும், ரிஷப் பந்த்தும் ஒன்றாகக் கை கோர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
ரிஷப் பந்த் 31 பந்துகளில், நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை அடித்து 46 ரன்களை எடுத்தார். ரிஷப் பந்த் அனுபவம் மிக்க ஓரு ஆட்டக்காரரை போன்று நடந்துகொண்டார்.
பந்துகளுக்கு ஏற்றவாறு அதை அடித்து ஆடினார் ரிஷப்.
ஷிகார் தவானும், ரிஷப் பந்த்தும் இணைந்து எடுத்த 100 ரன்களை ஒரு சிக்ஸர் மூலம் நிறைவு செய்தார் ரிஷப்.
ரிஷப் பந்த்படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGE
Image captionரிஷப் பந்த்
ரசல் வீசிய 17ஆவது ஓவரின் தொடக்க பந்தில் ஒரு பவுண்டரியையும், அடுத்து ஒரு சிக்ஸரையும் அடித்தார் ரிஷப். தவான் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இருவரும் 67 பந்துகளில் 102 ரன்களை எடுத்தனர்.
ஆனால் இந்த மேட்சின் கதாநாயகன் ஷிகார் தவான் என்று சொல்லலாம்.
இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஷிகார் தவான் சரியாக சோபிக்கவில்லை. கடந்த முறை பெங்களூருவிற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஷிகார் தவான் ரன் ஏதும் அடிக்காமலேயே அவுட் ஆனார்.
ஆனால் தனது கடந்த கால மோசமான போட்டிகளை இதன்மூலம் மறக்கடித்துவிட்டார் ஷிகார். கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 97 ரன்களை எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.
ஷிகார் தவான் சதம் எடுத்திருந்தால் அதுவே ஐபிஎல் போட்டிகளில் அவர் எடுக்கும் முதல் சதமாகும்.
ஆனால் தனது சதத்தைவிட டெல்லி அணியின் வெற்றியே முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.
ரிஷப் பந்த் சிறந்த ஆட்டக்காரர் என்றும், அவர் உடன் விளையாடியதால் தான் வேகமாக விளையாட முடிந்தது என்றும் தவான் தெரிவித்திருந்தார்.
ஷிகார் தவான் அடித்து ஆடத் தொடங்கிவிட்டால் அவரை தடுத்து நிறுத்துவது கடினம் என அனைவருக்கும் தெரியும்.
அந்த 97 ரன்களில் பலவிதமான பேட்டிங் யுக்திகளை அவர் பயன்படுத்தினார். அவரின் தன்னம்பிக்கை அவரின் ஆட்டத்தில் தெரிந்தது.
ரிஷப் பந்த்துடன் அவர் ரன் எடுக்க ஓடிய விதம் சிறப்பானதாக இருந்தது. சரியான நேரத்தில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஷிகார் தவான்.
இந்த ஐபிஎல் போட்டிகளில் மேற்கிந்திய ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தருணத்தில் சிறந்த ஆட்டத்தை இந்திய வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த ஐபிஎல் போட்டிகளில், தனது முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக 51 ரன்களை எடுத்திருந்தார் மற்றும் இரண்டாம் போட்டியிலும் சென்னைக்கு எதிராக 51 ரன்களை எடுத்தார் தவான்.
அதன்பிறகு தனது சொந்த ஊரான டெல்லியில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெறும் 16 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அதன்பின் பஞ்சாப் அணிக்கு எதிராக 30 ரன்களை எடுத்தார்.
ஆனால் ஐதராபாத் அணிக்கு எதிராக 12 ரன்களை எடுத்த போதும், பெங்களூரு அணிக்கு எதிராக ரன் ஏதும் எடுக்காதபோதும் அவரின் ஆட்டத்திறமை குறித்து அனைவரும் கேள்வி எழுப்பினர்
15ஆம் தேதி உலகக் கோப்பை போட்டிகளுக்கான அணியை பிசிசிஐ அறிவிக்கவுள்ளது.
எனவே சிறப்பான ஆட்டத்தை ஷிகார் தவானும், ரிஷப் பாண்டும் வெளிப்படுத்துவது அவர்கள் உலகக் கோப்பை போட்டியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பை அளிக்கும்.


--- Advertisment ---