கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும்!

புதுடெல்லி: 

அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து கமலுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.  டெல்லி நீதிமன்றத்தில் கமலுக்கு எதிராக இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா வழக்கு தொடர்ந்தார். 

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள் முன்பு, இந்துக்களுக்கு எதிராக பேசியதால் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  

இதற்கிடையே குறுக்கிட்ட நீதிபதிகள் நீங்கள் ஏன் இதில் தலையிடுகிறீர்கள்? என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினர். 

தான் ஒரு இந்து என்பதால் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளேன் என்று மனுதாரர் விஷ்ணு குப்தா தரப்பில் வாதிடப்பட்டது. 

இதையடுத்து நீதிபதிகள், கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆதாரங்களை ஆய்வு செய்த பின் கமலுக்கு சம்மன் அனுப்பலாமா, வேண்டாமா என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறினர். 

இந்நிலையில் இந்து சேனா அமைப்பு தொடர்ந்த வழக்கை ஆக.2-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.