8 ரன்கள் எடுத்தது வங்கதேசம்; அரை இறுதி வாய்ப்பை இழந்தது பாகிஸ்தான்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் வங்கதேச அணியை 94 ரன்கள் வென்றாலும், அந்த வெற்றி பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை வழங்கவில்லை.
308 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றால் மட்டுமே அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறலாம் என்ற விதியோடு இன்று விளையாடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 315 ரன்கள் எடுத்தது.
எட்டு ரன்களில் வங்கதேசத்தைச் சுருட்ட வேண்டும் எனும் இலக்கோடு பாகிஸ்தான் களமிறங்கியது. ஆனால் அதன் எண்ணம் நிறைவேறவில்லை.
வங்கதேசம் சேஸிங் துவங்கியபோது முதல் ஓவரை ஹபீஸ் வீசினார். இந்த ஓவர் மெய்டனாக அமைந்தது.
ஆமீர் வீசிய இரண்டாவது ஓவரில் முதல் பந்தில் இரண்டு ரன்கள், இரண்டாவது பந்தில் பௌண்டரி, மூன்றாவது ரன்கள் இல்லை , நான்காவது பந்தில் ஒரு ரன் எடுத்தார் சவுமியா சர்கார்.
ஆமீர் வீசிய ஐந்தாவது பந்தில் தமீம் ஒரு ரன் எடுத்தார். அப்போது வங்கதேசத்தின் ஸ்கோர் 8ஐ தொட்டது. அப்போது பாகிஸ்தான் அதிகாரபூர்வமாக வெளியேறியது.
சேஸிங்கில் வங்கதேசம் எட்டு ரன்களை எடுத்தபோது பாகிஸ்தான் இந்த உலகக்கோப்பையில் அரை இறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.
முதல் இன்னிங்ஸில் நிறைய ரன்களை குவித்து 308 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தினால் மட்டுமே நான்காவது அணியாக அரை இறுதிக்குள் நுழைய முடியும் என நிலைமை இருந்தது.
ஆனால் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இமாம் உல் ஹக் சதமடித்து அவுட் ஆனார். பாபர் அசாம் 96 ரன்கள் எடுத்தார். இமாத் வாசிம் 26 பந்தில் 43 ரன்கள் எடுத்தார்.
ஹரிஸ் சோகைல், அணித் தலைவர் சர்பிராஸ் அகமது சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
8 ரன்கள் எடுத்தது வங்கதேசம்; அரை இறுதி வாய்ப்பை இழந்தது பாகிஸ்தான்படத்தின் காப்புரிமைCHRISTOPHER LEE-IDI
வங்கதேச அணித் தரப்பில் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். சைஃபுத்தீன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
316 என்ற இலக்குடன் இராண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய வங்கதேச அணி, 44.1 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஷகிப் அல் ஹசன் 77 பந்துகளில் 64 ரன்கள் எடுத்ததே அந்த அணியின் பேட்ஸ்மேன் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
பிற ஆட்டக்காரர்கள் யாரும் அவ்வளவாக சோபிக்கவில்லை.
19 வயதே ஆகும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி தாம் வீசிய 9.1 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
புள்ளிப்பட்டியலில் 9 புள்ளிகளோடு ஐந்தாவது இடத்தில் உள்ளது பாகிஸ்தான்.
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வென்றால் நியூசிலாந்தை போலவே 11 புள்ளிகள் பெறும். ஆனால் ரன் ரேட்டில் நியூசிலாந்தை விஞ்சமுடியாது என்பதால் பாகிஸ்தான் உலகக்கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறியுள்ளது.

அரை இறுதிப்போட்டிகள் எப்படி நடைபெறும்?

புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணியும் நான்காம் இடம் பிடிக்கும் அணியும் ஜூலை 9-ம் தேதி மான்செஸ்டரில் நடக்கும் போட்டியில் முதல் அரை இறுதியில் மோதும்.
இரண்டாமிடம் பிடிக்கும் அணியும் மூன்றாமிடம் பிடிக்கும் அணியும் பெர்மிங்காம் மைதானத்தில் ஜூலை 11-ம் தேதி நடக்கும் இரண்டாவது அரை இறுதி போட்டியில் மோதும்.
ஆஸ்திரேலியா லீக் சுற்றில் தனது கடைசி போட்டியில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது. இப்போட்டியில் வென்றால் 16 புள்ளிகளோடு முதலிடம் பிடிக்கும். ஒருவேளை தோற்றாலும் இலங்கையிடம் இந்தியா தோற்கும் பட்சத்தில் முதலிடத்திலேயே நீடிக்கும்.
இந்தியாபடத்தின் காப்புரிமைGARETH COPLEY-IDI
ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா போட்டி மழையால் கைவிடப்பட்டால் ஆஸிக்கு 15 புள்ளிகள் கிடைக்கும். அப்படியொரு சூழலில் இந்தியா இலங்கையை வெல்லும் பட்சத்தில் இந்தியாவுக்கும் 15 புள்ளிகள் கிடைத்துவிடும் என்பதால் ரன் ரேட் அடிப்படையில் முதலிடம் யாருக்கு என்பது தீர்மானமாகும்.
ஆஸ்திரேலியா தென்னாப்ரிக்காவிடம் தோல்வியடைந்து இந்தியா- இலங்கை இடையிலான போட்டிகள் மழையால் கைவிடப்பட்டால் இரு அணிகளும் 14 புள்ளிகளோடு இருக்கும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் முதலிடம் தீர்மானிக்கப்படும்.
தற்போது ஆஸ்திரேலியா +1 எனும் ரன் ரேட்டில் உள்ளது. இந்தியா 0.811 எனும் ரன் ரேட்டில் உள்ளது.
புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடம் அல்லது இரண்டாவது இடம் பிடிக்க மட்டுமே வாய்ப்பிருக்கிறது. மூன்றாவது அல்லது நான்காவது இடம் பிடிக்க முடியாது.
இந்தியாவும் முதலிடம் அல்லது இரண்டாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடியும்.
ஆஸ்திரேலியா இரண்டாமிடமும் இந்தியா மூன்றாமிடமும் பிடிப்பதற்கான வாய்ப்புகளே இல்லை என்பதால் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை சந்திக்க வாய்ப்புகளே இல்லை.
ஆகையால் இந்திய அணி நியூசிலாந்து அல்லது இங்கிலாந்து அணியை அரை இறுதிப்போட்டியில் சந்திக்கும்.


Advertisement