அரசாங்கத்தை விமர்சித்தவர்களே அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகளை பெற்றுக் கொள்கின்றனர்

(க.கிஷாந்தன்)
முன்னைய அரசாங்கம் பச்சை, நீலம் ஆகிய நிற கட்சிகளை முன்னிலைப்படுத்தியே சலுகைகளை வழங்கியது. ஆனால் இன்று அந்த நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது. இன்று நாட்டின் பிரஜை ஒருவருக்கு தேவையான அனைத்து சேவைகளையும் அரசாங்கம் செய்து வருகின்றது என காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
நாவலப்பிட்டி பகுதியில் வசிக்கும் பல ஆண்டுகள் காணி உறுதி பத்திரம் இல்லாமல் இருந்த சுமார் 1200 பேருக்கு ரன் பீம எனும் காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு 13.07.2019 அன்று நாவலப்பிட்டி பவ்வாகம பகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பெருந்தெருக்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜெயவர்தன, நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலவச அம்புலன்ஸ் சேவையை நாட்டில் நடைமுறைப்படுத்தும் போது இந்தியா இலங்கையில் தலையீடு செய்வதாக கூறினர். அதாவது, இந்தியா புத்திசாதுரியமாக இலங்கையை கட்டுப்படுத்த முனைவதாக எதிர்கட்சிகள் கூறினர்.
குறிப்பாக இந்தியாவிலிருந்து அம்புலன்ஸ் சாரதிகள், தாதியர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்படவுள்ளதாக குற்றம் சுமத்தினர்.
இலங்கையில் உள்ள சில வைத்தியர்களும் அந்த அம்புலன்ஸில் நோயாளர்களை கொண்டு வந்தால் சிகிச்சை அளிப்பதையில்லை என கூறினர். இன்று என்ன நடந்துள்ளது. குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களே 1990 க்கு அழைத்து அந்த அம்புலன்ஸ் சேவையை பெற்றுக் கொள்கின்றனர்.
எனவே அரசாங்கம் முன்னெடுக்கும் சிறந்த திட்டங்களின் மூலம் அரசாங்கம் நன்மை அடையும் என கருதியே இவர்கள் இவ்வாறு குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என்றார்.--- Advertisment ---