'344 வயது' ஆமை உடல் நலக்குறைவால் இறந்தது


தங்களுக்கு சொந்தமான 344 வயதான ஆமை ஒன்று உடல்நல குறைவின் காரணமாக இறந்துவிட்டதாக நைஜீரியாவில் உள்ள அரச குடும்பம் ஒன்று அறிவித்துள்ளது.
வயதானது என்னும் அர்த்தம் கொண்ட 'அலக்பா' என்றழைக்கப்பட்ட அந்த ஆமை நைஜீரியாவின் ஓயோ மாநிலத்தில் ஓக்போமோசோ அரண்மனையில் வாழ்ந்து வந்தது.
மாதத்திற்கு இரண்டுமுறை மட்டுமே உண்ணும் இந்த பெண் ஆமையை பார்த்துக்கொள்வதற்கு மட்டுமே இரண்டு தனிப்பட்ட வேலையாட்கள் இருந்தனர்.
இந்த ஆமைக்கு நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக கருதப்பட்டதால் அந்நாட்டின் தொலைத்தூர பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து பார்வையிடுவது வழக்கம்.

1770 முதல் 1797 வரை ஆட்சி செய்த ராஜ்ஜியத்தின் மூன்றாவது தலைவரான இசான் ஒகுமாய்டே என்பவரால் இந்த ஊர்வன அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது.
ஒகுமாய்டேவின் காலத்தில் அரண்மனைக்கு கொண்டுவரப்படும் போதே அலக்பாவுக்கு 100 வயதிற்கு மேல் இருந்திருக்கும் என்று கருதப்படுகிறது.
344 வயதான ஆமை உடல்நலக்குறைவால் இறப்பு
அதே சூழ்நிலையில், இந்த ஆமையின் வயது விவகாரத்தில் வல்லுநர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
பிரிஸ்டல் மிருகக்காட்சிசாலையின் ஊர்வனவற்றின் கண்காணிப்பாளரான டிம் ஸ்கெல்டன், அலக்பா இவ்வளவு நீண்ட காலம் வாழ்ந்திருப்பது "சாத்தியமற்றது" என்றார்.