சஜித்தை போல் ஊழலற்றவர்கள் ஆட்சிக்கு வருமாயின் இலங்கைக்கு இந்திய அரசு 50,000 வீடுகள் வழங்கும்


(க.கிஷாந்தன்)
இலங்கையில் ஊழற்ற ஆட்சி ஒன்றினை கொண்டு செல்ல கூடிய தகுதியானவராக சஜித் பிரேமதாசவை போல் ஒருவர் ஆட்சிக்கு வருவாரேயானால் இலங்கையில் மேலும் 50,000 வீடுகளை அமைப்பதற்கான நிதியினை இந்தியா அரசாங்கம் வழங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதாக அமைச்சர் சுஜிவ சேனசிங்க தெரிவித்தார்.
சஜித்துடன் நாட்டை வெற்றிக்கொள்ளும் போராட்டம் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் முதலாவது பிரச்சார கூட்டம் 06.10.2019 அன்று காலை அட்டனில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மகிந்த ராஜபக்சவிடம் காணப்படுவது இனபேதம் மாத்திரமே, நாட்டில் யுத்தம் முடிந்தபின்பு மக்களின் மனதில் ஆதரவினை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் மீது ஆதரவாக இருப்பதை போல் எவ்வளவு பொய் கூற முடியுமோ அவ்வளவு பொய்களை கூறியுள்ளார்.
இவ்வாறு பொய் கூறிய பொய்யான ஆதரவினை வெளிப்படுத்தும் மகிந்த ராஜபக்ச கடந்த காலங்களில் மலையக மக்களையும் ஆதரவு காட்டி ஏமாற்றியும் உள்ளார். அவர்களின் நோக்கம் இந்த நாடு ராஜபக்சக்களின் நாடு என்பதை காட்டிக்கொண்டு ஹிட்லர் போன்றவர்களின் ஆட்சிகளை கொண்டு செலுத்துவதே ஆகும்.
இதனையே அவர்கள் அதிகமாக விரும்புவதை காணக்கூடியதாக இருந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கடந்த காலங்களில் வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தும் அங்கே பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் எம்மை சந்தித்தனர்.
அதன்போது எம்மிடம் வினாவினர் உங்கள் நாட்டு தலைவர் யார் என்று, அப்போது மகிந்த ராஜபக்ச என்று கூறினோம். நாட்டின் பாதுகாப்பு செயலாளர் யார் என்று கேட்டனர் அதற்கு கோட்டாபய ராஜபக்ச என்று தெரிவித்தோம். எங்கள் நாட்டு பொருளாதார அமைச்சர் என்று கேட்டனர் அதற்கு நாங்கள் பசில் ராஜபக்ச என்று கூறினோம். நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் யார் என்று கேட்டனர் சமல் ராஜபக்ச என்று கூறினோம். உங்கள் நாட்டின் முதலமைச்சர் யார் என்று கேட்டனர் சசிந்திர ராஜபக்ச என்று கூறினோம்.
அதேபோன்று இளம் உறுப்பினராக நாமல் ராஜபக்சவும் இருக்கிறார் என்று கூறினொம். அதற்கு அவர்கள் உங்கள் நாட்டில் ஏனைய தலைவர்களும் ராஜபக்சகர்களா என கேள்வி எழுப்பினார்கள்.
ஆனால் இதன்போது இந்த நாட்டில் குடும்ப ஆட்சியினரை போல் இவர்கள் இந்த ராஜபக்சக்கள் செயல்படுவதாக அவர்களுக்கு விவரித்தோம் என தெரிவித்த அவர்,
இந்த நாட்டில் ராஜபக்ச அரசு வந்ததன் பின்பு ஏனையவர்கள் தலைநிமிர்ந்து செல்லகூடாது என்ற ஹிட்லர் போலவே ஆட்சியை கொண்டு செலுத்த இவர்கள் முனைந்தனர். இதனை கட்டுப்படுத்தவே இந்த அரசாங்கத்தை ஐக்கிய தேசிய கட்சி பொது வேட்பாளர் ஊடாக கைப்பற்றியது. இன்று மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தல் வந்துள்ளது. அதில் சஜித் பிரேமதாச போட்டியிடுகின்றார். இவர் நாட்டு மக்களின் நன்மதிப்பினை பெற்ற நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்.
இவரை வெற்றியடைய செய்வதில் அணைத்து தரப்பினரும் உறுதியாக இருக்கின்றனர். அதேபோன்று மலையக மக்களும் உறுதியாக இருந்து அவரை வெற்றியடைய செய்ய வேண்டும். அதற்காக அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கீழ் இயங்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இந்த தேர்தல் செயற்பாடுகளுக்கு மக்கள் ஆதரவினை வழங்கி ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் சஜித் பிரேமதாசவை வெற்றியை உறுதிசெய்ய கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.