யாழில்– ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்



யாழ்ப்பாணம் – நாவலர் வீதி ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தையடுத்து யாழ் – காங்கேசன்துறை மார்க்கத்திலான ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடைத்துள்ளன.
குறித்த பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தையடுத்து, கோபமடைந்த ஊர் மக்கள் ரயில் கடவைக்குக் குறுக்காகத் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற குளிரூட்டப்பட் நகர்சேர் கடுகதி ரயிலும் தொடர்ந்து பயணிக்க முடியாமல் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் ஸ்தம்பித்தது.
இதே கடவையில் மூன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் பொதுமக்கள் விபத்துக்குள்ளானதோடு, பல தடவைகள் கால்நடைகள் விபத்துக்குள்ளாகியுள்ளனவென மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு ரயில் திணைக்கள அதிகாரிகள் வந்து பொதுமக்களுடன் பேச்சில் ஈடுபட்டனர்.
எனினும் மக்கள் சமாதானம் அடையாததையடுத்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பெருமளவு பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணைகளை மேற்கொண்டு பொதுமக்களை சமரசம் செய்து வைத்தனர்.