புனர்வாழ்வு வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு அரச நியமனம்


சமூக மயப்படுத்தப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் மத்தியில் பட்டப் படிப்பை பூர்த்தி செய்த 20 இளைஞர் யுவதிகளுக்கு பட்டதாரி தொழில் வாய்ப்பு நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் வருமாறு:
25. மீள சமூகமயப்படுத்தப்பட்ட மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்களுக்கு பட்டதாரி தொழில் வாய்ப்பு பரிந்துரை நடைமுறையின் கீழ் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தல்
வடக்கு கிழக்கில் நிலவிய மோதல் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் மீண்டும் சமூக மயப்படுத்தப்பட்ட, புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் மத்தியில் பட்டப் படிப்பை பூர்த்தி செய்த 65 பேருக்கு பட்டாரி பரிந்துரை முறையின் கீழ் இதற்கு முன்னர் நியமனங்கள் அளிக்கப்பட்டுள்ளன. புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் செயலகத்தின் புனர்வாழ்வு வேலைத்திட்டத்தின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்டு மீண்டும் சமூகமயப்படுத்தப்பட்ட பட்டப் படிப்பை பூர்த்தி செய்த மேலும் 20 இளைஞர் யுவதிகளுக்கு இந்த பரிந்துரை முறையின் கீழ் நியமனங்களை வழங்குவதற்காக தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள் , மீள் குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.