'முஸ்லிம்களுக்கு ஐந்து ஏக்கர் மாற்று நிலம் தேவையில்லை'

பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்னவாக இருந்திருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி.
உச்ச நீதிமன்றம் நீதிமன்றங்களில் உச்சமானதுதான். ஆனால், அங்கு தவறு நடக்க வாய்ப்பில்லை என்று கூற முடியாது என ஹைதராபாத்தில் பிபிசி தெலுங்கு சேவையின் தீப்தி பத்தினிக்கு அளித்த பேட்டியில் அவர் அயோத்தி தீர்ப்பை விமர்சித்துள்ளார்.
தீர்ப்பு குறித்த தனது திருப்தியின்மையை வெளிப்படுத்த தமக்கு உரிமையுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"இந்தியாவே இந்துத்துவ பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்காகவும் நான் பேச விரும்புகிறேன். ஒரு நாள் பாரதிய ஜனதா கட்சி இந்தியாவை இந்து தேசமாக மாற்றும்," என்றார் ஒவைசி.
"இங்கு 500 ஆண்டுகளாக ஒரு மசூதி இருந்தது. ஆனால், அது 1992, டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது என்று கூறியே எங்கள் பிள்ளைகளை வளர்ப்போம்," என்று ஒவைசி கூறினார்.
"அல்லாவுக்காக இல்லத்தை எழுப்ப இடம் வாங்க முடியாத அளவுக்கு வறிய நிலையில் முஸ்லிம்கள் இல்லை. இந்த ஐந்து ஏக்கர் மாற்று நிலம் முஸ்லிம்களுக்கு தேவையில்லை. ஹைதராபாத் நகரத் தெருக்களுக்கு வந்து நாங்கள் பிச்சை எடுத்தால் கூட, மக்கள் அதைவிட அதிகமாகக் கொடுப்பார்கள்," என்று கூறியுள்ளார் அவர்.
ராமஜென்ம பூமி என்று இந்து தரப்பினர் கூறிய இடத்தில் இருந்த பாபர் மசூதி, 1992இல் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது.
ராமர் பிறந்த இடம் அந்த மசூதி உள்ள இடம்தான் என்றும், 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆக்கிரமித்த முகலாயர்கள் அங்கிருந்த இந்துக் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டியதாகவும் இந்து அமைப்புகள் கூறுகின்றன.
1949 டிசம்பரில் இரவு நேரத்தில் அந்த மசூதியில் ராமர் சிலையை சிலர் கொண்டுவந்து வைக்கும் வரையில், அந்த இடத்தில் தாங்கள் வழிபாடு செய்து வந்ததாக இஸ்லாமியர் தரப்பில் கூறுகின்றனர்.
அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் வழங்கிய தீர்ப்பில், 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரித்து மனுதாரர்களான ராம் லல்லா (குழந்தை ராமர்), நிர்மோஹி அகாரா (இந்து துறவிகள் குழுவினர்) மற்றும் சுன்னி வக்ஃப் வாரியத்துக்கு சரிசமமாக பிரித்து தீர்ப்பளித்தது.
இந்தத் ததீர்ப்பின் மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்புக்கு சொந்தம், மசூதி கட்ட முஸ்லிம் தரப்புக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜாஃபர்யாப் ஜிலானிபடத்தின் காப்புரிமைANI
Image captionஜாஃபர்யாப் ஜிலானி
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு ஒதுக்குவதாக உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு ஒரு மனதாகத் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் இத் தீர்ப்பு குறித்து வழக்கில் முஸ்லிம் சார்பான மனுதாரரான சுன்னி வக்ஃபு வாரியத்தின் வழக்குரைஞர் ஜாஃபர்யாப் ஜிலானி எதிர்வினையாற்றியுள்ளார்.
தீர்ப்பு வெளியானவுடன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால் திருப்தி அடையவில்லை. மசூதிக்காக வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்குவது எங்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டுமா என்பது குறித்து உரிய காலத்தில் முடிவெடுப்போம்" என்று குறிப்பிட்டார்.
சர்ச்சைக்குரிய இடத்தில் தொழுகை நடந்ததை ஒப்புக்கொண்டு, அங்கு 1949இல் ராமர் சிலை உள்ளே வைக்கட்டது சட்டவிரோதம் என்றும் முழு இடத்தையும் இந்து தரப்புக்கு அளிப்பது நியாயமல்ல என்று மனுதாரர்களில் ஒருவரும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினருமான சர்ஃப்ராயப் கூறியுள்ளார்.


Advertisement