எகிறி குதித்தது,வெங்காய விலை


இலங்கையில் என்றும் இல்லாத அளவிற்கு வெங்காயத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
கொழும்பு மொத்த சந்தை நிலவரத்தின்படி, பெரிய வெங்காயம் ஒரு கிலோ 125 இலங்கை ரூபாய் முதல் 150 இலங்கை ரூபாய் வரை விற்கப்படுகின்ற அதேவேளை, சின்ன வெங்காயம் ஒரு கிலோ மொத்த விலை 550 இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 215 ரூபாய்) முதல் 650 இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 255 ரூபாய்) வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமின் சில்லறை விலை 200 இலங்கை ரூபாய் முதல் 300 இலங்கை ரூபாய் வரையும், சின்ன வெங்காயம் ஒரு கிலோகிராமின் சில்லறை விலை 700 இலங்கை ரூபாய் முதல் 750 இலங்கை ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் போன்ற பகுதிகளிலேயே வெங்காய உற்பத்தி இடம்பெற்று வருகின்ற பின்னணியில், அது உள்நாட்டு தேவைக்கு போதுமானதாக அமையாது.
இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்தே மேலதிக தேவைக்கான வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவது வழக்கமானது.
எனினும், இந்தியாவில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு நிலவுகின்றமையினால், இந்தியாவிலிருந்து இதுவரை காலம் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காய இறக்குமதி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் வெங்காய தேவையின் பெருமளவு பகுதியை, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயமே நிவர்த்தி செய்கின்ற நிலையிலேயே இந்தியாவின் இறக்குமதி தடையாகியுள்ளமையினால் இலங்கையில் வெங்காயத்திற்கான தட்டுப்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது.

வெங்காயம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஇந்தியாவில் நிலவும் வெங்காயத் தட்டுபாடு காரணமாக இன்று இலங்கை சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளிடமிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்கிறது இலங்கை.

கொழும்பிலுள்ள அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யும் சந்தைக்கு சென்று இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ் ஆராய்ந்தது.
பெரிய வெங்காயத்தின் விலை ஓரளவு அதிகரித்துள்ள போதிலும், சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய முடியாதளவிற்கு விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சின்ன வெங்காயத்தின் மொத்த விலை ஓரளவு குறைவடைந்துள்ள போதிலும், சில்லறை விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக வெங்காய வியாபாரியான சாந்த தெரிவிக்கின்றார்.
''சின்ன வெங்காயத்தின் இன்றைய மொத்த விலை 570 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. இன்று விலை சற்று குறைவடைந்துள்ளது. எனினும் கடந்த வாரம் வெங்காயம் ஒரு கிலோகிராமின் மொத்த விலை 600 ரூபாய் வரை காணப்பட்டது. எனினும், சில்லறை விலையே அதிகளவாக காணப்படுகின்றது. சில்லறை வர்த்தக நிலையங்களில் 750 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்" என சாந்த பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
மற்றுமொரு வெங்காயத்தை விற்பனை செய்யும் பெண் வியாபாரியான இந்திகா விஜேகுமாரியிடம் பிபிசி தமிழ் பேசியது.
''கெட்டுப்போன வெங்காயத்தை சுத்திகரித்து விற்பனை செய்யப்படும் போது, ஒரு லாபத்தை வைக்க வேண்டியுள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தை 700 ரூபாய் அல்லது 750 ரூபாய் வரை விற்பனை செய்ய வேண்டும். மக்களினால் கொள்வனவு செய்ய முடியாத அளவிற்கு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. எனினும், பண்டிகை காலம் என்பதனால் அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது," என இந்திகா விஜேகுமாரி குறிப்பிட்டார்.

வெங்காய விலைபடத்தின் காப்புரிமைHUW EVANS PICTURE AGENCY

வெங்காயத்தின் விலை அதிகரிப்பு தொடர்பில் இலங்கை அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் இளமநாதனிடம் பிபிசி தமிழ்பேசியது.
இலங்கையில் சின்ன வெங்காயம் பொதுவாக யாழ்ப்பாணத்திலேயே உற்பத்தி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் நிலவிய அதிக மழையுடனான வானிலையினால் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனாலேயே உள்நாட்டு சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்திய மத்திய அரசாங்கத்தினால் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதாக கூறிய அவர், அதனால் தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து வருவதாகவும் கூறினார்.
குறித்த நாடுகளில் இயல்பானவே வெங்காயத்தின் விலை அதிகம் என்பதனால், இலங்கைக்கு கொண்டு வரும்போது ஒரு கிலோகிராம் வெங்காயத்திற்கு சுமார் 550 இலங்கை ரூபாய் வரை செலவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
எனினும், நாட்டின் தேவையை கருத்திற் கொண்டு அதிக கேள்வி நிலவுகின்ற சின்ன வெங்காயம், கடந்த வாரம் முதல் தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெங்காயத்துக்குப் பற்றாக்குறைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

சின்ன வெங்காயம் தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்தே தற்போது இறக்குமதி செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று, பெரிய வெங்காயம் பாகிஸ்தான், ஈரான், ஈராக், துருக்கி, சீனா போன்ற பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருவதாக இளமநாதன் கூறினார்.
இலங்கைக்கு இதுவரை காலமும் பெருமளவிலான வெங்காயம் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டதுடன், மேலதிக தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் பாகிஸ்தானிடமிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.
எனினும், இந்தியாவில் நிலவும் வெங்காயத் தட்டுப்பாடு காரணமாக இன்று இலங்கை சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளிடமிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.