"ராஜபக்ஷவிற்கு எதிராக இருந்ததற்காகவே கைது செய்யப்பட்டேன்"

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்றிரவு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை சிறையில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2016ம் ஆண்டு இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் காயமடைந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய பத்தரமுல்லை பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் அவரை கைது செய்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.
அவரிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டதுடன், இரவு 10 மணியளவில் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்கபடத்தின் காப்புரிமைAZZAM AMEEN / TWITTER
சபாநாயகரோ அல்லது நீதிமன்றத்தினதோ அனுமதியின்றி தான் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார்.
கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரை கைது செய்ய முயற்சித்த சந்தர்ப்பத்தில் அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
''வெளியில் சென்று பிரதி சபாநாயகருக்கு நந்தன என்ற இந்த போலீஸ் அதிகாரி அறிவித்தார். அதன் பின்னர் எந்தவித அறிவித்தலும் இன்றி, நீதிமன்ற அறிவித்தலும் இன்றி இங்கு வந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். நீதவானுக்கும், சபாநாயகருக்கும் இங்கு வந்ததன் பின்னரே அறிவிக்கின்றனர். இது சட்ட விரோத பிரவேசம். பலவந்தமாக அழைத்து செல்கின்றனர்" என பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறினார்.
கைது செய்யப்பட்டமைக்கான காரணம் சட்டவாதிக்கம் என பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறுகின்றார்.
ராஜபக்ஷவிற்கு எதிராக அரசியலில் ஈடுபட்ட தவறுக்காகவே தான் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்கபடத்தின் காப்புரிமைAZZAM AMEEN / TWITTER
இதுவொரு அரசியல் பழிவாங்கும் செயற்பாடு என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கின்றார். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பாட்டலி சம்பிக்க ரணவக்கவை பார்வையிடுவதற்காக பெருமளவிலான அரசியல்வாதிகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்திருந்தனர்.
அத்துடன்,குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வெளியில் பெரும் திரளான ஆதரவாளர்களும் நேற்றிரவு கூடியிருந்ததை காண முடிந்தது.
சம்பிக்க ரணவிக்கவின் சட்டத்தரணி கடந்த 16ம் தேதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு சில விடயங்களை தெளிவூட்டியிருந்தார்.
காலி - இமதுவ பகுதியிலுள்ள ரணவக்கவின் ஓட்டுநர் வீட்டிற்கு சென்ற பொலிஸார், அங்கிருந்த அவரது மனைவி, ஒன்றரை வயதான மகள் மற்றும் அவரை கடத்தி பத்தரமுல்லை பகுதிக்கு அழைத்து வந்துள்ளதாக அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
எனினும், ஓட்டுநரின் குடும்பத்தார் தமது விருப்பத்திற்கு அமையவே வருகை தந்ததாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
2016ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் ஆரம்பித்திருந்தனர்.
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்கபடத்தின் காப்புரிமைPATALI / FACEBOOK
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அவரது ஓட்டுநர் திலும் குசித்த குமார ஆகியோருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்தது.
2016ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் வாகனத்தின் ஓட்டுநர் தனது தவறை ஏற்றுக் கொண்டதுடன், வழக்கு விசாரணைகள் நிறைவடைந்திருந்ததாக சம்பிக்க ரணவக்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு கூறியிருந்தார்.
வாகன விபத்தை எதிர்கொண்ட மோட்டார் சைக்கிள் ஒட்டுனரான சந்தீப் சம்பத் மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும், தமக்கு நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அவரது பெற்றோர் அண்மையில் கூறியிருந்தனர்
இந்த நிலையிலேயே இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊடகவியலாளர்கள் நீதிமன்றத்திற்குள் செல்ல தடை
நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சம்பிக்க ரணவக்கவின் விசாரணைகள் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் நீதிமன்றத்துக்குள் செல்ல போலீசார் தடை விதித்திருந்தனர்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதிலும், அது தொடர்பில் பொலிஸார் எந்தவித பதிலையும் வழங்கவில்லை.
குறிப்பாக வழக்கு விசாரணைகளின் போது, செய்தி சேகரிப்பதற்கான அனுமதி ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Advertisement