#ஃபேஸ்புக்.சீன அதிபரிடம் மன்னிப்பு கேட்டது


தங்கள் இணையதளத்தில் சீன பிரதமர் ஷி ஜின்பிங்கின் பெயர் பர்மிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு ஆபாசமான பொருள் தரும் வகையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
சீன அதிபர் ஷி ஜின்பிங் மியான்மரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இரண்டாவது நாளன்று இந்த மொழிப்பெயர்ப்பு குறித்த சர்ச்சை பொதுவெளிக்கு வந்தது.
இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) ஷி ஜின்பிங், மியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூச்சி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பு பற்றிய பர்மிய அரசின் ஃபேஸ்புக் இடுகைகளில், ஷியின் பெயர் ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சீன அதிபரிடம் மன்னிப்பு கேட்ட பேஸ்புக் நிறுவனம்படத்தின் காப்புரிமைREUTERS
சூச்சியின் தனிப்பட்ட மற்றும் அலுவலக ஃபேஸ்புக் கணக்குகளின் மூலம் பர்மிய மொழியில் இடப்பட்ட பதிவுகளில் சீன அதிபரின் பெயர் "Mr Shithole" (திரு. மலத்துளை) என்று ஆங்கிலத்தில் தவறுதலாக மொழிபெயர்க்கப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், இந்த தவறான மொழிபெயர்ப்புக்கு, "தொழிநுட்ப பிரச்சனையே" காரணம் என்று தெரிவித்துள்ளது.
"ஃபேஸ்புக்கில் பர்மிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மேற்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்பில் இருந்த தொழில்நுட்ப பிரச்சனை ஒன்றை நாங்கள் சரிசெய்துவிட்டோம். இதுபோன்ற சம்பவம் நடந்திருக்க கூடாது. இது இனியும் நிகழாமல் இருக்க தக்க நடவடிக்கைளை எடுத்து வருகிறோம்" என்று ஃபேஸ்புக்கின் செய்தித்தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் தெரிவித்துள்ளார்.
மியான்மரின் அதிகாரபூர்வமான மொழியாக விளங்கும் பர்மிய மொழியை, அந்நாட்டிலுள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பேசுகின்றனர்.
சீன அதிபரிடம் மன்னிப்பு கேட்ட பேஸ்புக் நிறுவனம்படத்தின் காப்புரிமைEPA
பர்மிய வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தைகளை கொண்ட தரவு தொகுப்பில் சீன அதிபரின் பெயர் இடம்பெறவில்லை என்று ஃபேஸ்புக் மேலும் தெரிவித்துள்ளது.
எந்தெந்த வார்த்தைகளுக்கு எல்லாம் இணையான மாற்றுமொழி வார்த்தைகள் தரவு தொகுப்பில் இல்லையோ அவற்றை கணினி தானாக கணிக்கும் வகையில் ஃபேஸ்புக் இணையதளம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் கூறுகிறது.
"உதாரணமாக, "xi" மற்றும் "shi" முதலிய வார்த்தைகளுடன் தொடங்கும் அனைத்து பர்மிய வார்த்தைகளுக்கும் கூட, "shithole" என்ற மொழிபெயர்ப்பே வருகிறது. பர்மிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு செய்யும்போது இருக்கும் இந்த பிரச்சனையை களைவதற்கு முயன்று வருகிறோம்" என்று ஃபேஸ்புக் தரப்பில் கூறப்படுகிறது.
எனினும், உள்ளூர் நேரப்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வரை இந்த பிரச்சனை சரிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.