நாடாளுமன்ற தேர்தல் மீண்டும் தள்ளி வைக்கப்படுமா?


#RanjanArunPirasaath.
மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்து கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் மாதம் நடத்தப்படும் என்று திங்களன்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.

இந்நிலையில் தேர்தல் மீண்டும் ஒருமுறை பிற்போடப்படுவதற்கான சாத்தியம் எழுந்துள்ளது.

அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று தேர்தல் தேதி மறு பரிசீலனை செய்யப்படும் என்று தேர்தல்கள் ஆணையம் தரப்பில் பிபிசி தமிழிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளபடி ஜூன் மாதம் தேர்தலை நடத்துவதை நோக்கியே தேர்தல் ஆணைக்குழு இயங்கி வருகிறது.

தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாத போதிலும், நாட்டிலுள்ள நிலைமை குறித்து ஆராய்ந்து அந்த சந்தர்ப்பத்தில் மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் எஸ்.இரத்னஜீவன் ஹுல் தெரிவிக்கின்றார்.

தேர்தல் ஆணைக்குழுவிலுள்ள மூன்று உறுப்பினர்களும் ஒன்றிணைந்தே இந்த தீர்மானத்தை எட்ட முடியும் என அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
எவ்வாறாயினும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விதத்திலேயே தாம் செயற்படுவதாகவும், தேர்தல் தேதியை அண்மித்த காலப் பகுதியில் நாட்டின் நிலைமையை அவதானித்து தீர்மானத்தை எட்டுவது குறித்து அப்போது ஆராயப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவில் உறுப்பினர் எஸ்.இரத்னஜீவன் குறிப்பிடுகின்றார்.

அரசியல் கட்சிகள் எழுப்பிய முரண்பாடுகள்
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரியவுடன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று மாலை நடத்திய சந்திப்பில் பல்வேறு முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த நிலையில், கோவிட் - 19 நோய்த்தொற்று பரவல் காரணமாக தேதி நிர்ணயம் இன்றி தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் பிற்போடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், ஜுன் மாதம் 20ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தது.

இவ்வாறு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு பெரும்பாலான கட்சிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் ஜுன் மாதம் 2ஆம் தேதிக்கு முன்னர் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பது அரசியலைப்பு விதி என்று கூறப்பட்டிருந்தது.

ஜுன் 2ஆம் தேதிக்குப் பின்னர் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பை மீறும் ஒரு செயற்பாடு என கட்சிகளின் பிரதிநிதிகள் கூறியுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜுன் 2ஆம் தேதிக்கு பின்னர் தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால், ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இயல்பாகவே வலுவிழந்துவிடும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறாயினும், ஜுன் 2ஆம் தேதிக்கு பின்னர் சபாநாயகருக்கு பழைய நடைமுறைகளை பின்பற்றி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிகாரம் இயல்பாகவே கிடைக்கப் பெறும் என ரவூப் ஹக்கீம் குறிப்பிடுகின்றார்.

கொரோனா வைரஸ் பிரச்சனை இதுவரை முற்றுப் பெறாத நிலையில், தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படுகின்றமையானது முற்று முழுதாக நாடு சர்வதிகாரத்தை நோக்கி பயணிக்கின்றது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறான காரணங்களை முன்னிலைப்படுத்தியதை தொடர்ந்து, மற்றுமொரு சந்திப்பை நடத்தி நாட்டின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்து தேர்தல் தேதியை மீள்பரிசீலனை செய்வது குறித்து ஆராய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய இணக்கம் தெரிவித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்: