கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமருக்கு தீவிர சிகிச்சை

கொரோனா வைரஸ் அறிகுறி தீவிரமடைந்ததால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பிரிட்டன் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்ததால் மருத்துவர்கள் ஆலோசனைக்குப் பிறகு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனை பிரிட்டன் பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
அவருக்குச் சிறந்த சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபிசி அரசியல் பிரிவு செய்தியாளர் க்ரிஸ் மேசன், திங்கட்கிழமை மதியம் போரிஸ் ஜான்சனுக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார். அதே நேரம், வென்டிலேட்டரில் (செயற்கை சுவாசக் கருவி) போரிஸ் ஜான்சன் சிகிச்சை பெறவில்லை.
கோவிட்-19 தொற்றுக்குள்ளான முதல் தலைவர்
உலக நாடு ஒன்றின் அரசுக்கு தலைமை தாங்குபவர்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபரான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மார்ச் 27ஆம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Banner
"கடந்த 24 மணிநேரத்தில் எனக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டன. எனக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. என்னை நானே தனிமைப்படுத்திக்கொள்வேன். நாம் இந்த வைரஸுக்கு எதிராகப் போராட, காணொளி காட்சி சந்திப்புகள் மூலம் அரசு நடவடிக்கைகளுக்குத் தலைமை ஏற்பேன்," என அப்போது அவர் ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.
பிரிட்டனின் சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹான்காகும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் மேட்.
ஏற்கனவே பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு ஸ்காட்லாண்டில் தனிமைப்படுத்தப்பட்ட அவர் குணமடைந்தார்.
பிரிட்டன் ராணிக்கு போரிஸ் ஜான்சன் குறித்த தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படுவதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ்
தேவைப்படும் இடங்களில் பிரதமரின் பணிகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை செயலாளர் டொமினிக் ராபை போரிஸ் கேட்டுக்கொண்டதாகச் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் கொரோனா
இங்கிலாந்து, ஸ்காட்லாண்ட், வேல்ஸ் மற்றும் வடக்கு ஐர்லாந்து பணிகளை உள்ளடக்கிய ஐக்கிய ராஜ்ஜியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 439 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
இதுவரை அங்கு 51, 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5373 பேர் பலியாகி உள்ளனர்


Advertisement