பயங்கரவாதிகள் தாக்குதலில்,பச்சிளம் குழந்தைகளும் பலி

ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு ஒன்றில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழத்தவர்களில் தாய்மார்கள், பிறந்த குழந்தைகள், செவிலியர்களும் அடங்குவர். மேலும் 16 பேர் இதில் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவிக்கிறார்.

செவ்வாய்க்கிழமை நடந்த இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

இத்தாக்குதல் நடத்தப்பட்ட அதே நாளில், அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள நங்கர்தார் என்ற இடத்தில் தற்கொலைதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து தாலிபன்கள் மற்றும் பிற குழுக்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குமாறு ஆஃப்கன் அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

ஆஃப்கன் மருத்துவமனையில் பயங்கரவாதிகள் தாக்குதல் : பச்சிளம் குழந்தைகளும் பலிபடத்தின் காப்புரிமைEPA

வன்முறைகளை குறைத்துக்கொள்ள பல முறை அழைப்பு விடுத்தபோதும், பயங்கிரவாதிகள் அதற்கு ஒத்துழைக்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

நங்கர்ஹார் பகுதியில் நடந்த தற்கொலைதாரி தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ் குழுவினர் பொறுப்பேற்றுள்ளனர். ஆனால் காபூல் மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவினரும் பொறுப்பேற்கவில்லை.

தாலிபன்களும் இந்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவமனையில் என்ன நடந்தது ?

காபூல் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அன்று நடத்தப்பட்ட தாக்குதலின்போது முதலில் இரண்டு வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். பிறகு துப்பாக்கி ஏத்திய நபர் ஒருவர் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

ஆஃப்கன் மருத்துவமனையில் பயங்கரவாதிகள் தாக்குதல் : பச்சிளம் குழந்தைகளும் பலிபடத்தின் காப்புரிமைREUTERS
Image captionமூன்று துப்பாக்கிதாரிகளுடன் பல மணிநேரம் சண்டையிட்ட சிறப்பு படையினர் குழந்தைகளின் உயிரைக் காத்தனர்.

தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து தப்பிய மருத்துவர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டபோது மருத்துவமனையில் 140 பேர் இருந்ததாக குறிப்பிடுகிறார். மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வார்டை சர்வதேச மருத்துவ தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறது. இதனால் வெளிநாடுகளை சேர்ந்த பலரும் அந்த மகப்பேறு வார்டில் பணியாற்றுகின்றனர்.

''யாரெல்லாம் மருத்துவமனையில் இருந்தார்களோ அத்தனை பேர் மீதும் காரணமின்றி துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தினர்'' என தாக்குதலை நேரில் பார்த்த ராமாஜான் அலி என்ற வியாபாரி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவமனையில் இருந்த 100 பெண்களும் குழந்தைகளும் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். காவல் துறை அதிகாரிகள் போலவே வேடம் அணிந்து தாக்குதல் நடத்திய மூன்று பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

மருத்துவமனையில் இருந்த பிறந்த குழந்தைகளை ரத்தம் சிந்திய போர்வைகளில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக தூக்கிச் சென்ற காட்சிகளையும் காண முடிந்தது.Advertisement