துர்நாற்றம் வீசுவது தொடர்பான பிரச்சினைக்கு சுமூக தீர்வு

பாறுக் ஷிஹான்


கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட இஸ்லாமபாத் வீட்டுத்திட்ட   மலக் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவது தொடர்பான பிரச்சினைக்கு சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை(26) மாலை அம்பாறை மாவட்டம்  கல்முனை சுமத்ராராம விகாரை சூழல் மற்றும் அதனை அண்டிய மக்கள் குடியிருப்பு மக்கள்   மலக் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவது தொடர்பான முறைப்பாடு ஒன்றினை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்ததற்கமைய அவ்விடத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

இதன் போது நிலமைகளை ஆராய்ந்த பின்னர் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் றகீப்  கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் ஆகியோரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு குறித்த மக்களின் குற்றச்சாட்டு தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆராய்ந்து ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா என கேட்டார்.

இதற்கமைய சம்பவ இடத்திற்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.றிஸ்வின்  மற்றும் சுகாதார பரிசோதகர் குழுவினர் வருகை தந்து ஆராய்ந்ததுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அவ்விடத்தில் ஊடகங்களில் ஊடாக தெரியப்படுத்தினர்.

மேலும் கல்முனை மாநகர சபை முதல்வரின் உத்தரவிற்கமைய சம்பவ இடத்திற்கு சுகாதார சுத்திகரிப்பு  பொறுப்பதிகாரி சுத்திகரிப்பு மேற்பார்வையாளர் வருகை தந்து இத்துர்நாற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு  ஆறுதல் கூறி நாளை காலை இக்கழிவு வெளியேற்றம் தொடர்பான பிரச்சினைக்கு உடனடி தீர்வை காண்பதாக வாக்குறுதி அளித்தனர்.

மேற்படி மக்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வினை பெற்று தர அனைத்து அதிகாரிகளையும் வரவழைத்த முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு   கல்முனை  சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன  நன்றிகளை தெரிவித்தார்

மேற்குறித்த பிரச்சினையானது சுமார் 10 வருடங்களுக்கு மேலாக  காணப்படுவதுடன் குறித்த வீட்டுத்திட்டத்தை  அண்டியுள்ள நீரோடும்  கால்வாயினுள் சட்டவிரோதமாக மலக்கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement