பெண்களால் கவனம் பெற்ற சூழலியல் போராட்டங்கள்

மு. நியாஸ் அகமது,

மு. நியாஸ் அகமது,

வாழ்வியல் பிரச்சனையோ, சூழலியல் பிரச்சனையோ அல்லது சமூக அவலமோ சமீபகாலங்களில் வெகு மக்களை சென்று சேர முக்கியக் காரணமாக பெண்கள் இருக்கிறார்கள்.


சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020 அறிக்கை கடந்த மார்ச் மாதமே மக்கள் கருத்து கேட்புக்காக இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தாலும் ஜூலை மாதத்தில் சாமானிய மக்களும் இது குறித்து பேச முக்கிய காரணமாக இருந்தது பத்மப்ரியா என்ற பெண் வெளியிட்ட காணொளியும் முக்கிய காரணம்.


பத்மப்ரியா வெளியிட்ட காணொளி

சூழலியல் அமைப்புகள் தொடர்ந்து இது குறித்த போராட்டங்களை முன்னெடுத்து கொண்டிருந்தாலும் இணையத்தில் இந்த விஷயத்தை அதிகப் பேரிடம் கொண்டு சேர்த்தது பத்மப்ரியா வெளியிட்ட காணொளிதான்.


அந்த காணொளியில் பத்மப்ரியா சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020 சட்டம் என்றால் என்ன, அதில் உள்ள பிரச்சனைகள் என்னென்ன, என்று விவரித்து இருந்தார். இந்தக் காணொளி அதிகப் பேரால் பார்க்கப்பட்டது, பகிரவும் பட்டது.


இதனை அடுத்து அவருக்கு சில தீவிர வலதுசாரிகள் மிரட்டல் விடுத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.


கொடைக்கானல் பிரச்சனை

ஒரு சூழலியல் போராட்டதில் பெண்கள் முதல் வரிசையில் நிற்பதும், அவர்கள் மூலமாக அந்த பிரச்சனை அல்லது போராட்டம் வெகு மக்களிடம் சென்று சேர்வதும் இது முதல்முறை அல்ல.


கொடைக்கானல் பிரச்சனைபட மூலாதாரம்,SCREEN GRAB

இதற்கு முன்பே பாதரச கழிவு தொடர்பான யுனிலீவர் நிறுவனத்துக்கு எதிரான கொடைக்கானல் மக்களின் போராட்டம் வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்தது சோஃபியா அஷ்ரஃபின் 'கொடைக்கானல் வோண்ட்...' எனும் பாடல் காணொளி.


யூ- டியூப்பில் மட்டும் இந்த காணொளி ஏறத்தாழ 42 லட்சம் முறை பார்க்கப்பட்டது. பரவலாகப் பகிரப்பட்டது.


பாடல் வெளியிட்டதை கடந்து சோஃபியா அஷ்ரஃப் யுனிலீவருக்கு எதிராக ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.


சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020 என்றால் என்ன? அதற்கு எதிர்ப்பு ஏன்?

ஸ்டெர்லைட்: தமிழகத்தில் வெற்றி பெற்ற 3 சூழலியல் போராட்டங்கள்

சாத்தான்குளம் விவகாரம்

பாடகி சுசித்ராபட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு காணொளி ஒரு சம்பவத்தை உலகம் முழுக்க கொண்டு சேர்த்தது என்றால் சாத்தான்குளம் தந்தை - மகன் காவல் மரணம் தொடர்பாக பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோதான்.


அவர் பேசி பகிர்ந்த காணொளி வைரலாக பகிரப்பட்டது. இரண்டு கோடிக்கும் அதிகமான பேர் அந்த காணொளியைப் பார்த்தார்கள். அதனை வைத்துப் பிற நாடுகளைச் சேர்ந்த யூடியூபர்களும் சாத்தான்குளம் தொடர்பாகக் காணொளியை உருவாக்கி இருந்தார்கள்.


கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள், பெரும் தொழில் அதிபர்கள், இந்த காணொளியை பகிர்ந்து சாத்தான்குளம் சம்பவத்திற்கு உரிய விசாரணை கோரி இருந்தனர்.


பாடகி சுசித்ரா சாத்தான்குளம் வழக்கு தொடர்பான காணொளியை நீக்கியது ஏன்? - பிபிசிக்கு பேட்டி

பெண்கள் ஏன் போராட்டக் களத்துக்கு வருகிறார்கள்?

கூடங்குளம் போராட்டம்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கூடங்குளம் போராட்டம்


இப்போது மட்டும் அல்ல அணு உலைக்கு எதிரான கூடங்குளம் போராட்டத்தில் முன்வரிசையில் நின்றது பெண்கள்தான்.


இது தொடர்பான செய்திகளை அப்போது களத்திற்கு சென்று சேகரித்த கவின்மலர், "என் வாழ்நாளில் நான் பார்த்த மிகப் பெரிய போராட்டம் அது," என்கிறார்.


"பெண்களுக்கு கூர் உணர்வு அதிகம். சொல்லப்போனால் ஆண்களைவிட சமூக அக்கறையும் அதிகம். இதையெல்லாம் விட குடும்பம் மற்றுன் சமூகத்தின் மீதான அளப்பெரிய அன்புதான் அவர்களை வீதிக்கு வந்து போராட வைக்கிறது. இப்போது நாம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் சீர்க்கேட்டால் மிக மோசமாக பாதிக்கப்பட போவது அடுத்த தலைமுறைத்தான். தன் பிள்ளை, பேரன் கஷ்டப்படுவதை எண்ணி நெஞ்சு பொறுக்காமல் அவர்கள் வீதிக்கு வருகிறார்கள்," என்கிறார் கவின்மலர்.


நெடுவாசல், கதிராமங்கலம் சூழலியல் தொடர்பான அனைத்து போராட்டங்களிலும் பெண்கள் முதல் வரிசையில் நின்று இருக்கிறார்கள் என கூறும் கவின்மலர், ஸ்டெர்லைட் போராத்தில் சுடப்பட்டு இறந்த ஸ்னோலினை நினைவு கூர்கிறார்.


இன்னும் பின்னோக்கி பார்த்தோமானால் 1970களில் நடந்த அமைதி பள்ளத்தாக்கை காப்பதற்கான போராட்டம் வெகுஜன போராட்டமாக மாறியதில் மலையாள பெண் கவிஞர் சுகந்தகுமாரிக்கு முக்கிய பங்கு உண்டு.


அமைதி பள்ளத்தாக்குபட மூலாதாரம்,M NIYAS AHMED

அவர் எழுதிய `மரத்தின்னு சுதிதி` எனும் கவிதை இந்த போராட்டத்தை பலரிடம் கொண்டு சேர்த்தது. அது போல கோலா நிறுவனத்துக்கு எதிரான பிளாச்சிமடைப் போராட்டத்தின் நாயகியாக மயிலம்மா கருதப்படுகிறார்.


சர்வதேச அளவில் காலநிலை மாற்றம் தொர்பான விவகாரத்தில் போராடும் கிரேட்டா தன்பெர்க்கும் குறிப்பிடத்தக்கவர்.


பெண்கள் உறுதியானவர்கள்

"ஆண்களின் போராட்டத்தை சுலபமாக கலைத்துவிட முடியும். பெண்களின் போராட்டத்தை கலைப்பது கடினம். அவர்கள் உறுதியானவர்கள்," என்கிறார் எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான இரா. முருகவேள்.


பாவனி ஆற்றில் கலந்த ஆலை கழிவுகள், அதற்கான போராட்டம் என்பதை மையமாக வைத்து இவர் எழுதிய முகிலின் நாவல் பரவலான பாராட்டைப் பெற்றது.


அவர், "பெண்களால் கூட்டத்தை சுலபமாக திரட்டிவிட முடியும். தேவையான போராட்டத்தில் மட்டுமே கலந்து கொள்ளும் அவர்கள், அதில் உச்சபட்ச நேர்மையாக இருப்பார்கள்," என்கிறார்.


"சமூகத்தை அதிகம் நேசிப்பவர்கள் பெண்கள். நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு நேரடியான பாதிப்பு பெரும்பாலும் சூழலியல் சார்ந்த பிரச்சனைகளாலேயே வருகிறது. அதனால், அவர்கள் சூழலியல் போராட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்," என்று கூறுகிறார்.