கடலோர நகரங்களில் வெள்ளம்



 துருக்கியின் ஈஜியான் கடலோர பகுதியிலும், கிரீஸின் சேமோஸ் தீவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பல வீடுகள் சேதம் அடைந்தன. ஏராளமான உயிரிழப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.

துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம், 7.0 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 419 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது. சேமோஸ் தீவில் இரண்டு பதின்ம வயது நபர்கள் உயிரிழந்தனர்.

இரு இடங்களிலும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக கடல் பகுதியில் ஆழமான சுழல் உருவாகி மினி சுனாமி போல கடல் அலைகள் மேலெழும்பின. இதனால் கடல் நீர் கடலோர நகருக்குள் புகுந்ததில் வெள்ளம் ஏற்பட்டது. இரு இடங்களிலும் உணரப்பட்ட நிலநடுக்கம் கிரீஸில் ஏதென்ஸ் நகரிலும் துருக்கியில் இஸ்தான்புல்லிலும் உணரப்பட்டது.

இந்த இரு நாடுகளிலும் நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கமான நிகழ்வு என்றாலும், தற்போதைய பாதிப்பு அதிகமானதாக அறிய முடிகிறது.

துருக்கியில் 30 லட்சம் பேர் வாழும் மூன்றாவது பெரிய நகர் இஸ்மிர். நிலநடுக்கம் ஏற்பட்டவுடனேயே அங்கு சுமார் 20 கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் மக்கள் பீதியடைந்து வீதிகளில் அங்குமிங்குமாக ஓடினர்.

துருக்கி
படக்குறிப்பு,

துருக்கியின் இஸ்மிர் நகரில் நிலநடுக்கத்துக்கு பிந்தைய காட்சி

அத்தகைய ஓர் இடத்தில் கட்டடம் இடிந்து விழும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மற்றொரு காணொளியில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தேடி மீட்கும் நடவடிக்கையில் பொதுமக்களும் மீட்பு ஊழியர்களும் ஈடுபட்டிருப்பதை பார்க்க முடிகிறது.

கடல் சீற்றம் ஏற்பட்ட நேரத்தில், கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் பலர் இன்னும் கரை திரும்பவில்லை. பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என துருக்கி அதிபர் ரிசெப் தயீப் எர்துவான் உறுதியளித்தார்.

கிரீஸில் என்ன நிலை?

கிரீஸ் நாட்டின் சேமோஸ் தீவில் நிலநடுக்கம் 6.7 ஆக பதிவானது. அங்கும் கட்டடங்கள் சேதம் அடைந்தன. இதில் 2 பதின்ம வயது நபர்கள் உயிரிழந்தனர்.

கிரீஸ்
படக்குறிப்பு,

கிரீஸின் சேமோஸ் நகரில் நிலநடுக்கத்துக்கு பிந்தைய காட்சி

நிலநடுக்கத்துக்கு பிந்தைய தாக்கம் அங்கு தொடர்ந்து உணரப்பட்டு வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தின் தாக்கம் சக்திவாய்ந்ததாக உணர முடிந்தது என்று உள்ளூர் செய்தியாளர் மனோஸ் ஸ்டெஃபானாகிஸ் பிபிசியிடம் தெரிவித்தார். 1904ஆம் ஆண்டில் கிரீஸ் நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கமாக தற்போதைய சம்பவம் கருதப்படுகிறது. சேமோஸ் தீவில் கடலோர பகுதியில் வாழும் சுமார் 45 ஆயிரம் பேரும் அந்த பகுதியில் இருந்து விலகியே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.