நுவரெலியா மாவட்டத்தில் எழுவருக்கு கொரோனா!



 (க.கிஷாந்தன்)

 

நுவரெலியா மாவட்டத்தில் கினிகத்தேன, மஸ்கெலியா மற்றும் வட்டவளை ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எழுவர் (26.11.2020) இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

வட்டவளை -  குயில்வத்தை, கினிகத்தேன - ஹிட்டிகே கம, மஸ்கெலியா - மவுசாகலை நைன்ஸா மேல் பிரிவு தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

 

குறிப்பாக அட்டன், கினிகத்தேன ஹிட்டிகேகம பகுதியில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதில் மூன்று வயது குழந்தை, மூன்று ஆண்கள் மற்றும் பெண்ணொருவர் உள்ளடங்குகின்றனர்.

 

கொழும்பிலிருந்து நுவரெலியா மாவட்டத்துக்கு வருபவர்கள் கினிகத்தேனை, கலுகல்ல பகுதியில் உள்ள சோதனைச்சாவடிக்கு அருகாமையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கடந்த சனிக்கிழமை முதல் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

அந்தவகையில் மூன்று வயது குழந்தையின் தாயிடமும் கொழும்பில் இருந்து வந்தவர் என்ற அடிப்படையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து அவர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே ஐவருக்கு வைரஸ் தொற்று இன்று (26) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

அதேவேளை, வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவனும் கொழும்புசென்று வந்தவராவார்.

 

கொழும்பு ஊர்கொடவத்தையில் தனது தந்தை மற்றும் தாய் வசிக்கும் இருப்பிடத்துக்கு பாட்டி சகிதம் குறித்த மாணவன் அண்மையில் சென்றுள்ளார்.

 

மீண்டும் ஊர் திரும்பும் வழியில் அவரிடம் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. இதில் வைரஸ் தொற்று உறுதியானது.

 

பிரிஆர் பரிசோதனை முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் இம்மாணவர் நேற்று (25) பாடசாலைக்குச்சென்றுள்ளார். எனினும், பாடசாலை நிர்வாகத்தினரால் அவர் திருப்பி அனுப்பட்டுள்ளார். ஆனாலும் இன்று பாடசாலை வளாகம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.

 

அத்துடன், மஸ்கெலியா மவுசாகலை நைன்ஸா மேல் பிரிவை சேர்ந்தவரும் கடந்த 23 ஆம் திகதி கொழும்பில் இருந்து வந்தவராவார்.

 

வைரஸ் தொற்றுக்கு உள்ளான எழுவரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளனர்.

 

அதேவேளை,  கொழும்பில் இருந்து நுவரெலியா மாவட்டத்து வருபவர்களிடம் கலுகல்ல மற்றும் எல்பட பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் தொடர்ச்சியாக பெறப்படுகின்றன. எல்பொட சோதனைச்சாவடியில் இன்றுவரை 100 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.