டயகமவில் 225 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை



 (க.கிஷாந்தன்)

நுவரெலியா - டயகம மேற்கு பிரதேசத்தில் கொட்டும் மழையிலும், சிறியவர்கள், பெரியவர்கள் என 225 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை இன்று (23.12.2020) மேற்கொள்ளப்பட்டதாக, லிந்துலை பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

மேற்படி பிரதேசத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த கொரோனா தொற்றாளர்கள் எட்டு பேர் இனங்காணப்பட்டதையடுத்து, அவர்கள் நெருங்கி பழகியவர்களுக்கு 23.12.2020 அன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், பரிசோதனை மாதிரிகள் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.

அத்தோடு, லிந்துலை சுகாதார மருத்துவ காரியாலயத்திற்குட்பட்ட பிரிவில் நான்கு கொரோனா நோயாளிகள் இன்று (23.12.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அக்கரப்பத்தனை பசுமலை பகுதியில் இருவருக்கும், இராணிவத்தை நோனாதோட்டத்தில் ஒருவருக்கும், லிந்துலை மவுஸ்ஸாஎல்ல பகுதியில் ஒருவருக்கும் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த தொற்றாளர்கள் கொழும்பு பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ளதாக சுகாதார அதிகாரிகளின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளன.

இந்த இரண்டு தினங்களாக டயகம, அக்கரப்பத்தனை பகுதிகளில் 16 தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளமை குறிப்பி்தக்கது.