நாளாந்த மற்றும் வாராந்த சந்தை நடவடிக்கைகளைத் தடை



 வி.சுகிர்தகுமார் 0777113659   


 மறு அறிவித்தல் வரை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறக்கூடிய நாளாந்த மற்றும் வாராந்த சந்தை நடவடிக்கைகளைத் தடை செய்வதுடன் தனிமைப்படுத்தல் சட்ட ஏற்பாடுகளை மீறிச் செயற்படுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு அவர்களை தனிமைப்படுத்தலுக்குட்படுத்தும் செயற்பாடும் முன்னெடுக்கப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் தனிமைக்குட்படுத்தப்பட்டு 21 நாட்களின் பின்னர் 9 பிரிவுகளை தவிர்ந்த ஏனைய பிரதேங்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கொவிட் 19 செயலணிக்கூட்டம் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று  நடைபெற்றது.
இக்கூட்டத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் குறிப்பிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன், மற்றும் வைத்தியர் திருமதி எஸ்.அகிலன், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன், சபையின் செயலாளர் ஆர்.சுரேஸ்ராம், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அக்கரைப்பற்று இராணுவ முகாம் அதிகாரி உள்ளிட்ட பிரதேச செயலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆலையடிவேம்பு பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், விடுவிக்கப்படாத பகுதிகள் தொடர்பிலும் மேற்கொள்ளப்படவேண்டிய சமகால நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
தீர்மானங்களாக
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் விடுவிக்கப்படாத, தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அக்கரைப்பற்று – 8ஃ1, அக்கரைப்பற்று – 8ஃ3 மற்றும் அக்கரைப்பற்று – 9 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலிலுள்ள பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் விநியோக மற்றும் விற்பனை நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லல்.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள  பகுதிகளை அண்டியுள்ள காரணத்தினால் குறித்த அக்கரைப்பற்று – 8ஃ1, அக்கரைப்பற்று – 8ஃ3 மற்றும் அக்கரைப்பற்று – 9 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலிலுள்ள பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் வெளிப் பிரதேசத்துக்குள் செல்வதைத் தடுக்கும் நோக்கோடும், தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிப்பிரதேசங்களில் வசிப்போர் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குள் உள்நுழைவதைத் தடுப்பதற்குமாக ஒவ்வொரு  3 மணித்தியாலங்களுக்கும் ஒரு அணி என்ற சுழற்சி அடிப்படையில் பொலிஸ் மற்றும் இராணுவ உத்தியோகத்தர்களை எல்லைப் பிரதேசங்களில் கடமையில் ஈடுபடுத்துதல்.
குறித்த அக்கரைப்பற்று – 8ஃ1, அக்கரைப்பற்று – 8ஃ3 மற்றும் அக்கரைப்பற்று – 9 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலிருந்து அன்றாடத் தொழில் நிமித்தமும், ஜீவனோபாயத் தேவைகளுக்காகவும் வெளிப் பிரதேசத்துக்குச் செல்லக்கூடிய பொதுமக்களை அந்தந்தக் கிராம சேவகர் பிரிவுகளுக்கான கிராம உத்தியோகத்தர்கள் மூலம் இனங்கண்டு, அவர்களில் எவரேனும் தனிமைப்படுத்தல் சட்ட ஏற்பாடுகளை மீறிச் செயற்படுகிறார்களா என்பதைக் கண்காணித்து, அவ்வாறு செயற்படுபவர்கள் எவரேனும் அடையாளப்படுத்தப்பட்டால், சுகாதார வைத்திய அதிகாரியின் உதவியோடு அவர்களைக் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதோடு, அவர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் விடுவிக்கப்பட்டுள்ள மற்றும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கும் சகல பொதுமக்களும் ஆபத்தான வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்குச் செல்வதற்கான தடையுத்தரவைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதோடு, வெளிப் பிரதேசங்களைச் சேர்ந்த எந்தவொரு வியாபாரிக்கும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குள் உள்நுழையவும், வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடவும் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தல்.
தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அக்கரைப்பற்று – 8ஃ1, அக்கரைப்பற்று – 8ஃ3 மற்றும் அக்கரைப்பற்று – 9 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலிலுள்ள சகல வியாபார நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூடிவைத்திருப்பதோடு, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள மளிகைப் பொருட்கள், வெதுப்பக உணவுகள் (பேக்கரி), மரக்கறிகள், மீன், இறைச்சி, விவசாய உர விற்பனை நிலையங்களைத் தவிர்த்து, சிகையலங்கார நிலையங்கள், உணவுக் கடைகள் (ஹோட்டல்கள்), ஆடை விற்பனை நிலையங்கள், அழகுக்கலை நிலையங்கள் (பார்லர்கள்), மதுபானசாலைகள் உள்ளிட்ட ஏனைய சகல வர்த்தக நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூடுதல்.
முறையான அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிப் பிரதேச விவசாயிகளை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வயல் பிரதேசங்களுக்குச் செல்ல தொடர்ந்தும் அனுமதி மறுத்தல்.
எந்தவொரு அரச சார்பற்ற நிறுவனமோ, தனி நபரோ அல்லது தனிப்பட்ட குழுக்களோ ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உரிய அனுமதியின்றி உலர் உணவுப்பொருட்களை நிவாரணமாக வழங்கமுடியாது. தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி அவ்வாறு முறையற்ற வழிகளில் அவற்றை வழங்குவோர் மற்றும் வழங்க முற்படுவோர் மீது சட்ட நடைமுறைகளைப் பிரயோகித்தல்.
மறு அறிவித்தல் வரை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறக்கூடிய நாளாந்த மற்றும் வாராந்த சந்தை நடவடிக்கைகளைத் தடை செய்தல் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் மேற்பார்வையில் வியாபார அனுமதிப் பத்திரம் பெற்ற வியாபாரிகளுக்கு மாத்திரம் போதிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அக்கரைப்பற்று, தருமசங்கரி மைதானத்தில் நாளாந்தம் மரக்கறி மற்றும் மீன் விற்பனைகளில் ஈடுபட இடமளித்தல்.
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் மேற்பார்வையில் எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட பண்டிகைக் காலங்களைக் கருத்திற்கொண்டு வீதியோர விற்பனைகளைத் தடை செய்தல் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடக்கூடிய களியாட்டங்கள், விழாக்கள் என்பவற்றுக்கான தடையுத்தரவைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துதலும் மறு அறிவித்தல் வரை சகல சமய வழிபாட்டுத்தலங்களையும் மூடி வைத்தலும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.