அக்கரைப்பற்றும் அதனை அண்டிய பிரதேசங்களும் இயல்பு நிலை நோக்கி


 


வி.சுகிர்தகுமார் 0777113659   

  அம்பாரை மாவட்டத்தில்; அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், படிப்படையாக குறைவடைந்து வருகின்றது.


இன்று காலை முதல் அம்பாரை மாவட்டத்தில் பெரும்பாலான பிரதேசங்களில் மழைவீழ்ச்சி தனிந்துள்ள நிலையில் வெள்ளம் வடிந்தோடி வருகின்றது.

ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் அகழ்ந்து விடப்பட்டதன் காரணமாக குறித்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிலை குறைவடைந்துள்ளமையும் இங்கு அவதானிக்க முடிந்தது.

இருந்தபோதிலும் சில குடியிருப்புக்களிலும் தாழ்நிலப்பிரதேசத்திலும் ஏற்பட்ட வெள்ளம் வடிந்தோட முடியாத நிலை காணப்படுகின்றது. இதனை வடிந்தோட செய்யும் பணியில் ஆலையடிவேம்பு பிரதேச சபை ஈடுபட்டு வருகின்றது.

இதேநேரம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த நாட்களில் ஏற்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் சட்டம் தற்போது ஓரளவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் நடமாட்டம் வழமைபோன்று காணப்பட்டது.

இந்நிலையில் அக்கரைப்பற்று மத்திய பஸ் தரிப்பிடத்தில் இருந்து போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்றாலும்  பயணிகள் அங்கு அதிகளவாக காணப்படவில்லை.

வங்கிகளும் சேவையினை மட்டுப்படுத்திய அளவில் வழங்கிய நிலையில் பல வியாபார நிலையங்களும் திறந்திருந்தன.

இது இவ்வாறிருக்க வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை வழங்க பிரதேச செயலகங்கள் தயாராகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.