விவசாயிகளுக்கு அனுமதி

 வி.சுகிர்தகுமார் 0777113659  


 

அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவசாயிகளுக்கு சுழற்சி முறையில் விவசாய நிலங்களுக்கு செல்ல இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விவசாய அமைப்புக்கள் மற்றும் விவசாயிகள் அரசிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக சுகாதார துறையினரின் அறிவறுத்தலுக்கமைவாக குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் குறித்த சிலருக்கு சுழற்சி முறையில் விவசாய நிலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கினார்.
ஆனாலும் இன்று காலை பாதுகாப்பு தரப்பினர் விவசாயிகளை மீண்டும் தடுத்ததாகவும் அவர்களின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்னர் மீண்டும் அனுமதித்தாகவும் அம்பாரை மாவட்ட விவசாய அமைப்புக்களின் அதிகார சபை செயலாளரும்; அகில இலங்கை விவசாய அமைப்புக்களின் அதிகார சபை உறுப்பினருமான பொறியியலாளர் எம்.ஏ.சபீ தெரிவித்தார்.
இதேநேரம் நேற்று 500 இற்கும் மேற்பட்ட விவசாயிகள்; தங்களை விவசாய நிலங்களுக்கு செல்ல அனுமதி தரவேண்டும் என கோரி நேற்று அதிகாலை 5 மணிமுதல் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புட்டம்பை கிராமத்தில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக பசளை மற்றும் கிருமிநாசினிகள் உள்ளிட்ட வாகனங்களுடன் காத்திருந்தனர்.
ஆனாலும் அவர்களுக்கான அனுமதி கொரோனா தொற்று அச்சம் காரணமாக சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய இராணுவத்தினரால் மறுக்கப்பட்ட நிலையில் இன்று அனுமதி வழங்கப்பட்டது.


Advertisement