தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை ஆரம்பம்

 


சுகாதார ஊழியர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு COVID-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.


கொழும்பு தேசிய தொற்றுநோயியல் பிரிவில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.


இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே ஆகியோர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.


AstraZeneca Covishield-இன் முதலாவது தடுப்பூசி தேசிய தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரமவிற்கு செலுத்தப்பட்டது.


இதேவேளை, நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.


இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


141 ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் லால் விஜேதுங்க, கேர்ணல் டாக்டர் ஷவீன் சேவகே, கெப்டன் டாக்டர் பசிந்து பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இதன்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.


தேசிய வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்களுக்கும் இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.


இந்த செயற்றிட்டத்தின் மற்றுமொரு கட்டம் ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலும் முன்னெடுக்கப்பட்டது.


வைத்தியசாலையின் 250 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.


களுபோவில போதனா வைத்தியசாலையிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது.


இந்த நிலையில், COVID தடுப்பூசி செலுத்தப்படும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.


இந்திய அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் நேற்று (28) நாட்டை வந்தடைந்தன.


COVID ஒழிப்பு நடவடிக்கைகளில் முன் நின்று பணியாற்றும் 1,50,000 சுகாதாரப் பிரிவினர் , 1,20,000 முப்படையினர் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கப்படுகின்றது.Advertisement