காத்தான்குடி, எப்போது விடுவிக்கப்படும்?



 எம்.எஸ்.எம்.நூர்தீன்.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் எப்போது விடு  விக்கப்படும் என்ற கேள்வி தற்போது பொதுமக்களால் எழுப்பப்பட்டு வருகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு முழுமையாக தனிமைப் படுத்தப்பட்டது.

இதையடுத்து இந்தப் பிரதேசத்தில் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் அண்டிஜன் பரிசோதனைகள் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று  வருகின்றன.
இந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டன.

எனினும் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
விடுவிக்கப்பட்ட 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி குட்வின் சந்தியிலிருந்து காத்தான்குடியில் வடக்கு எல்லை வரைக்கும் பிரதான வீதியில் பல வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் குட்வின் சந்தியிலிருந்து தெற்கு எல்லை வரைக்கும் பிரதான வீதியில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் உள்ளக வீதிகளிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
அதேபோன்று காத்தான்குடியிலுள்ள   பாடசாலைகள், பள்ளிவாயல்கள், மதரசாக்கள், தனியார் கல்வி நிலையங்கள், பிரத்தியேக வகுப்புக்கள் உட்பட அனைத்தும் மூடப்பட்டே உள்ளன.

ஒரு மாத காலத்தை நெருங்கி உள்ள இந்த  தனிமைப்படுத்தலினால் வர்த்தகர்களின் வர்த்தக  நடவடிக்கைகள் மிகவும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
கூலித் தொழிலாளர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள், தனியார் வாகனங்களின் சாரதிகள், அங்காடி வியாபாரிகள் என  பல்துறை தொழிலாளர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தனிமைப்படுத்தலானது மக்களின் சுகாதார பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்பதுடன் கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாகும்.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இந்த ஒரு மாத காலத்தில் அன்டிஜன் மற்றும் பி.சிஆர் பரிசோதனைகள் அதிகளவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் பெரிய அளவிலான தொற்றாளர்கள் எங்கும் இனம் காணப்படவில்லை. ஆங்காங்கே ஒரு  சிலர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு பலரும் வீடு வந்து சேர்ந்து விட்டனர்.
தற்போது விடுவிக்கப்பட வேண்டிய 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 7517 குடும்பங்களைச் சேர்ந்த  24734  பேர் வசிக்கின்றனர்.
இந்த 10 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளிலும் கடந்த ஒரு வார காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனைகளில் யாரும் இனம் காணப்படவில்லை எனவும் அதேநேரம் பி.சி.ஆர் பரிசோதனைகளில் ஒருவர், இருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு தொற்றாளர்கள் பெரிய அளவாக இனம் காணப்படாத நிலையில் தொடர்ந்து ஏன் இந்த பத்து பிரிவுகளையும் முடக்க வேண்டும் என்று பொதுமக்கள் வினா எழுப்புகின்றனர்.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே அந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இவைகளை முன் வைத்து காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் சுகாதாரத்துறை  உயர் அதிகாரிகளுக்கும் ஏனைய உயர் அதிகாரிகளுக்கும் எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளது.
இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டு காத்தான்குடியிலுள்ள 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் விடுவிக்குமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.