ரவிச்சந்திரன் அஸ்வின் 5வது டெஸ்ட் சதம்


 இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே, சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சதம் அடித்துள்ளார்.

அஸ்வின் 134 பந்துகளில் 100 ரன்களை எட்டினார். அஸ்வின் ஓல்லி ஸ்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழக்கும் முன்பு 148 பந்துகளில் 106 ரன்கள் எடுத்திருந்தார். இவற்றில் 14 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடக்கம்.


ஏற்கனவே நடந்து முடிந்துள்ள முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் அஸ்வின்.

இன்றைய டெஸ்ட் சதம் அஸ்வினுக்கு 5வது டெஸ்ட் சதமாகும். ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அதே போட்டியில் அஸ்வின் சதம் அடிப்பது இது மூன்றாம் முறை.

அஸ்வின் களம் இறங்கிய பொழுது இந்தியா ஆறு விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை எடுத்திருந்தது.

அஸ்வின் மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி
படக்குறிப்பு,

அஸ்வின் மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி

மூன்றாம் நாள் ஆட்டமான இன்று அஸ்வின் மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோரின் இணை 96 ரன்களை எடுத்தது.

இரண்டாம் இன்னிங்சில் இந்தியா 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 134 ரன்களும், இந்திய அணி 329 ரன்களும் எடுத்திருந்தன. தற்போது இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியுள்ளது.Advertisement