இளவரசி லத்தீஃபா: மாயமாகிப் போன துபாய் ஆட்சியாளரின் மகள்


இளவரசி லத்தீஃபாவின் வழக்கத்தையும் மீறிய கடத்தல் மற்றும் ரகசிய தடுத்து வைப்பு ஆகியவை குறித்த பரபரப்பான புதிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

டினா ஜாகியானன் அவரது தோழியிடம் பேசி பல மாதங்கள் ஆகின்றன.

துணிச்சலான தப்பிக்கும் முயற்சி ஒன்றுக்கு பிறகு இளவரசி லத்தீஃபா துபாயில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் ரகசிய செல்பேசி ஒன்றின் மூலம் இவருடன் சில காலம் தொடர்பில் இருந்தார்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

ஆனால் திடீரென இந்தத் தொடர்பு நின்று போனது. தினா லத்தீஃபாவை கடைசியாக பார்த்த பொழுது படகின் தளத்தில் நின்று கொண்டு அவர்கள் இருவரும் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டே இந்திய பெருங்கடலில் பயணித்தார்கள்.

துபாய்
படக்குறிப்பு,

துபாயின் விண்ணை முட்டும் கட்டடங்கள்

பிப்ரவரி 2018இல் துபாயிலிருந்து லத்தீஃபாவை வெளியேறி புதிய வாழ்க்கை தொடங்குவதற்கான அபாயம் நிறைந்த திட்டத்தை செயல்படுத்துவதில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் 25 குழந்தைகளில் ஒருவர் லத்தீஃபா. சேக் மக்தூம் துபாயை ஒரு மினுமினுப்பு மிகுந்த நகரமாகவும், வணிகத்தில் ஈடுபட விரும்புபவர்கள் வந்து குவியும் இடமாகவும், அப்பிராந்தியத்தில் இருப்பவர்கள் விளையாட விரும்பும் இடமாகவும் மாற்றியிருந்தார்.

ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெண்களுக்கு சட்டங்கள் மற்றும் பழக்கங்கள் அவர்கள் வாழ்க்கையை மிகவும் கட்டுப் படுத்தும் விதத்தில் இருந்தன.

"நான் வாகனம் ஓட்ட அனுமதிக்கப் படுவதில்லை. துபாயில் பயணிக்கவோ, துபாயை விட்டு வெளியேறவோ, எனக்கு அனுமதி இல்லை," என்று அவர் தப்பிக்கும் முன்பு பதிவு செய்த காணொளி ஒன்றில் கூறியுள்ளார் லத்தீஃபா.

"2000மாவது ஆண்டு முதல் நான் நாட்டை விட்டு வெளியே செல்லவில்லை. நான் வெளியே சென்று பயணிக்க வேண்டும், படிக்க வேண்டும், ஏதாவது இயல்பானவற்றைச் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருகிறேன் ஆனால் அவர்கள் என்னை விடவில்லை. நான் இங்கிருந்து செல்ல வேண்டும்," என்று அந்தக் காணொளியில் அவர் கூறியுள்ளார்.

தோழி டினாவுடன் லத்திஃபா
படக்குறிப்பு,

தோழி டினாவுடன் லத்திஃபா

டினாவின் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் அமர்ந்துகொண்டு அடுத்து என்ன வர உள்ளது என்பது குறித்து மகிழ்ச்சியுடன் பேசுகிறார்.

"எனக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கை உள்ளது. காலையில் எழுந்த பின்பு நான் எப்படி உணர்வேன் என்று எனக்கு தெரியாது. நான் என்ன செய்ய விரும்பினாலும் இன்றே செய்ய விரும்புகிறேன் என்றே நினைக்கிறேன். அதைச் செய்வதை எதிர்நோக்கி உள்ளேன்," என்று அவர் அதில் பேசுகிறார்.

இளவரசி லத்தீஃபாவுக்கு கடவுச்சீட்டு கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார். அதன் காரணமாக அவர் துபாயில் இருந்து நழுவி வெளியேறி ஓமன் கடற்கரையோரம் வரவேண்டியிருந்தது.

ஒரு பாழடைந்த சிறு படகில் அவர்கள் சர்வதேச கடல் எல்லைக்கு வர பல மணி நேரங்கள் ஆகின. அன்று மாலை அவர்களை சுதந்திரத்திற்கு அழைத்துச்செல்ல இருந்த படகை அவர்கள் சென்றடைந்தனர்.

தனது நண்பர் ஒருவருக்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியில் "நான் இப்போது சுதந்திரமாக இருக்கிறேன்," என்று லத்தீஃபா அறிவித்தார்.

இந்தியப் பெருங்கடலைக் கடந்து சென்று அதன் பின்பு அமெரிக்காவுக்கு விமானம் மூலம் செல்ல வேண்டும் என்பது அவர்களது திட்டம். அங்கு அரசியல் தஞ்சம் கோரலாம் என்று லத்தீஃபா எண்ணியிருந்தார்.

ஆனால் 8 நாட்கள் கழித்து அவர்கள் இந்திய கரையோரம் நெருங்கியபோது அவரது தப்பும் முயற்சி மிகவும் மோசமாகிப்போனது.

ஆயுதமேந்தியவர்கள் அவரது படகில் ஏறினார்கள். கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்படும் வரை அவர்கள் கழிவறைக்குள் ஒளிந்து இருந்தனர் புகைக் குண்டுகள் வீசப்பட்ட பின்னரே அவர்கள் படகின் தளத்துக்கு வந்தனர்.

"லத்தீஃபா கத்திக் கொண்டே அவர்களை உதைத்துக் கொண்டிருந்தார். 'என்னைத் திரும்பவும் ஐக்கிய அரபு அமீரகம் அழைத்துச் செல்லாதீர்கள். இங்கேயே சுட்டு விடுங்கள்' என்று தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார் என்கிறார் டினா.

அப்பொழுதுதான் கடைசியாகத் தனது தோழியைப் பார்த்தார் டினா.

அதன் பின்பு லத்தீஃபா வெளியிட்ட காணொளிகளில் அந்த படகில் என்ன நடந்தது என்பது குறித்த விரிவான தகவல்கள் உள்ளன. இந்த காணொளிகள் இப்பொழுதுதான் வெளியாகியுள்ளன.

"நான் போராடிக் கொண்டிருந்தேன்; ஒரு சிறிய பையைக் கொண்டு வந்த ஒரு நபர் உள்ளேயிருந்து ஓர் ஊசியை எடுத்து என் கையில் செலுத்தினார்," என்று அந்தக் காணொளியில் லத்தீஃபா கூறுகிறார்.

அதன்பின்பு ஓர் இந்திய ராணுவ கப்பலுக்கு தான் மாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

"அந்த கமாண்டோக்கள் என்னை ஒரு தாழ்வாரம் வழியாக தூக்கிக்கொண்டு ஒரு பெரிய அறைக்குள் சென்றனர். அங்கு என் முன்பு 4 அல்லது 5 ராணுவத் தளபதிகள் இருந்தனர். அவர்களிடம் எனது பெயர் லத்தீஃபா என்று திரும்பத் திரும்ப கூறி வந்தேன். நான் துபாய் செல்ல விரும்பவில்லை. எனக்குத் தஞ்சம் வேண்டும். நான் சர்வதேச கடல் எல்லையில்தான் இருந்தேன். நீங்கள் நான் செல்ல அனுமதிக்க வேண்டும்," என்று கூறியதாக அந்தக் காணொளியில் லத்தீஃபா கூறுகிறார்.

ஆனால் அதற்கு யாரும் செவி கொடுக்கவில்லை என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சேர்ந்த ஒருவரால் தான் தாக்கப்பட்டதாகவும் கூறுகிறார் லத்தீஃபா கூறுகிறார்.

"அவர் என்னை இறுக்கப் பிடித்துக் கொண்டார்; தூக்கினார்; உதைத்து சண்டையிட்டார். அவர் என்னை விட உருவத்தில் மிகப்பெரியவராக இருந்தார். அவரது கை சட்டை மேலே மடிக்கப்பட்டு கை வெளியே தெரிய வேண்டும் என்பதில் நான் கவனமாக இருந்தேன். எனக்கு ஓர் அடி விழுந்தது. என்னால் எவ்வளவு கடினமாக முடியுமோ அந்த அளவுக்கு கடினமாக நான் கடித்தேன். பின்பு தலையை ஆட்டினேன். அதன்பின்பு அவர் கத்தினார்," என்று கூறுகிறார் லத்தீஃபா

அதன் பின்பு மயக்க ஊசி செலுத்தப்பட்டு துபாய்க்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டதாக அந்த காணொளியில் விவரிக்கிறார்.

"அந்தத் தருணத்தில் எனக்கு மிகவும் சோகமாக இருந்தது. பல ஆண்டுகளாக என் சுதந்திரத்திற்காக நான் திட்டமிட்டு வந்த அனைத்தும் எடுக்கப்பட்டதாக நான் உணர்ந்தேன். அதன் பின்பு நான் தனியாகவே இருக்கிறேன். தனியாக அடைத்து வைக்கப்பட்டுள்ளேன். மருத்துவ உதவி கிடையாது, விசாரணை கிடையாது, குற்றச்சாட்டுகள் கிடையாது. எதுவுமே இல்லை."

டினா


Advertisement